வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன.
சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் அளித்த தகவலின்படி, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்துள்ளது.
இதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதனை பயன்படுத்தி 194 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. பின்லாந்து, சுவீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் 3வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்
இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்தியாவுடன் 62வது இடத்தை மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கன் உள்ளது. இதன் பாஸ்போர்ட் மூலம் 29 நாடுகளுக்கும், சிரியா பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 29 நாடுகளுக்கும், ஈராக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 31 நாடுகளுக்கும், பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை 34 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement