உறுப்பு தானம்: `இறந்த பிறகும் 2 பேருக்கு வாழ்வளித்த 4 வயது சிறுமி' – சண்டிகரில் நெகிழ்ச்சி

தற்போதைய காலகட்டத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு என்பது மக்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், சண்டிகர் மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்த நான்கு வயது சிறுமி, இரண்டு பேருக்கு வாழ்வளித்த நிகழ்வு நெகிழ வைத்திருக்கிறது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் வெளியான தகவலின்படி, இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி, ஜனவரி 2-ம் தேதி விபத்துக்குள்ளாகி சுயநினைவின்றி மயக்க நிலைக்குச் சென்றார்.

உறுப்பு தானம்

அதைத்தொடர்ந்து, ஜனவரி 3-ம் தேதி PGIMER மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பாக, சிறுமியின் பெற்றோர் அவரை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. ஜனவரி 9-ம் தேதி PGIMER மருத்துவமனை, சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக அறிக்கை மூலம் தெரிவித்தது. அதன் பின்னர், மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகளுக்கு உறுப்பு தானம் வழங்க சிறுமியின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்த மருத்துவமனை அறிக்கையில், “ஆபத்தான நிலையிலிருந்து சிறுமி வெளியே வரமாட்டார் என்று தெரிந்ததும், PGIMER உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், உடலுறுப்பு தானம் பற்றி பரிசீலிக்க முடியுமா என்று சிறுமியின் தந்தையை அணுகினர். அப்போது தனது உறுதியான பரந்த மனதை வெளிப்படுத்திய சிறுமியின் தந்தை, உறுப்பு தனத்துக்கு ஒப்புக்கொண்டார். பெற்றோரின் சம்மதத்தால் அந்த குட்டி தேவதை, உறுப்புதானத்துக்காக காத்திருக்கும் உயிர்களுக்கு கலங்கரை விளக்கமாக மாறினார். பெரும் சோகத்துக்கு மத்தியில் உறுப்பு தானம் செய்வதற்கான பெற்றோரின் முடிவு, இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உயிர் காக்கும் உறுப்பு தானம்

மேலும், அந்த அறிக்கையில் சிறுமியின் தந்தை, “உறுப்பு தானம் பிறருக்கு உதவும் என்று தெரிந்ததால், அதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இப்போது, நாங்கள் அனுபவிக்கும் இதயம் கனத்த வலியை அவர்கள் கடந்து செல்ல வேண்டிய அவசியமிருக்காது. என் மகளின் இந்தக் கதை, இதே நிலையில் இருக்கும் பிற குடும்பங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அதோடு, உடலுறுப்பு தானம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். ஏனெனில், மரணம் என்பது ஒரு முடிவல்ல, இதன் மூலம் மற்றவர்கள் வாழ முடியும்” என்று நெகிழ வைத்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.