இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் `ஆக்ஸ்போர்டு யூனியன் டிபேட் சொசைட்டி’ மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் உரையாடினார்.
அந்நிகழ்வில் இளம் தலைமுறையினர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருப்பது குறித்து மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர், “இளம் வயதில் எனக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கின்றன. அந்த நேரத்தில் என் அம்மா என்னிடம், ‘பிறருக்காக நீ வாழும்போது இதுபோன்ற எண்ணங்களெல்லாம் தோன்றாது’ என்பார். அதுதான் என் அவர் எனக்குச் சொன்ன அற்புதமான அறிவுரை.

பிறருக்காக நீங்கள் வாழும்போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வு அர்த்தமுடன் இருக்கும். இசையமைக்கும்போது, எழுதும்போது, உணவு இல்லாதவரகளுக்கு உணவளிக்கும்போது நான் இதை நினைத்துக் கொள்வேன். அதுதான் நம்மை இயக்குகிறது.
எதிர்காலத்தைப் பற்றி நாம் பெரிதாகக் கணிக்க முடியாது. ஆனால், அற்புதமான ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. இதுபோன்ற எண்ணங்களும், நம்பிக்கைகளும்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லோருக்கும் கடினமான நாள்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த உலகில் நமது பயணம் சிறியதுதான். நாம் எல்லோரும் பிறந்து, கொஞ்ச காலம் வாழ்ந்துவிட்டு இங்கிருந்துச் செல்லப் போகிறோம். எங்கு செல்லப்போகிறோம் என்பது ஒவ்வொருத்தரைப் பொறுத்து மாறுபடும். அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை, கற்பனைகளைப் பொறுத்தது. ஆனால், இங்கு நிரந்தரம் என்று ஒன்று இல்லை என்பது உறுதியானது” என்றார்.