பீஜிங்: இந்தியர்கள் கொந்தளிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மாலத்தீவுகள் இன்னும் விலகவில்லை. இந்நிலையில், சீனாவின் நட்பை பிடித்துக் கொள்வதற்காக, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சி குறித்து கேள்வி எழுப்பலாமா என, மாலத்தீவுகள் அதிபர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், கிண்டல், கேலி செய்தனர். இதற்கு நம் நாட்டு மக்கள் சமூக வலைதளத்தில் கொதித்தெழுந்தனர். மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் சமூக வலைதளத்தை அதிரவைத்தது.
இதையடுத்து, மூன்று இணையமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கி, மாலத்தீவுகள் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், சீன ஆதரவாளரான, மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது முய்சு, ஐந்து நாள் பயணமாக, சீனாவுக்கு சென்றுள்ளார்.
அதிக அளவில் சுற்றுலா பயணியரை அனுப்பி வைக்கும்படி, சீன அரசுக்கு அதிபர் முய்சு பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணியரில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
சீன அதிபர் ஷீ ஜின்பிங் உள்ளிட்டோரை மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு சந்தித்து பேசினார். இதில், 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதைத் தொடர்ந்து, கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘மாலத்தீவுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும். அதன் உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு இருக்கக் கூடாது’ என, சீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் முய்சு கூறியுள்ளதாவது: தன் நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் சீனாவுக்கு முழு உரிமை உள்ளது. இதில் அன்னிய நாடுகள் தலையிட முடியாது. ஒரே சீன கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். இந்த உலகில் ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் உள்ளிட்டவை அதன் பகுதியே. தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாதிகளை நாங்கள் எதிர்க்கிறோம். தைவான் போன்றவற்றுடன் எந்த துாதரக உறவையும் நாங்கள் மேற்கொள்ள மாட்டோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என, சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தைவான், சீனாவின் ஒரு பகுதி என, மாலத்தீவுகள் அதிபர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்