புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று, வெப்பநிலை குறைந்த பட்சமாக 3.6 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இதுவே, நேற்று முன்தினம் 3.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவியது. கடுங்குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக டில்லியில் பல சாலைகளி வாகனப் போக்குவரத்து குறைந்தது. பலர் வீடுகளுக்குள் முடங்கினர்.
சப்தர்ஜங்கில் நேற்று காலை 5:30 மணிக்கு மூடுபனியின் அடர்த்தி 200 மீட்டராக பதிவாகி இருந்தது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து 18 ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதமாக டில்லிக்கு வந்து சேர்ந்தன.
காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 365ஆக பதிவாகி இருந்தது. இது, மிக மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நேற்றும் கடுங்குளிர் நிலவியது. பல இடங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழ் சரிந்தது. ஹரியானா மாநிலம் நர்னால் நகரில் நேற்று, வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
அம்பாலா – 6.3, கர்னால் – 5.7, ஹிசார் – 3.6, ரோஹ்தக் – 5.4, பிவானி – 3.5, சிர்சா – 6 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பஞ்சாம் மாநிலம் அமிர்தசரஸ் – 7.2, லூதியானா – 4.9, பாட்டியாலா – 5.4, குர்தாஸ்பூர் – 3.8, பதான்கோட் – 6.6, பதிண்டா – 4.5, பரித்கோட் – 5, இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் 6.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானிலும் கடுங்குளிர் நிலவுகிறது. அல்வார் மற்றும் கரவுலி ஆகிய நகரங்களில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. தோல்பூர் – 4.5, ஜலோர் – 5.6, ஸ்ரீகங்காநகர் – 6.2, சிரோஹி மற்றும் பதேபூர் – 6.3, பிலானி – 6.4, ஜெய்ப்பூர் – 8.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. பிஷுன்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.8 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுதும் கடுங்குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சத்ரா க்ரிஷி விகாஸ் கேந்திரா – 4.1, குந்தி – 4.4, லதேஹர் – 4.9, லோஹர்தகா – 5.2, ராஞ்சி – 8.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகி இருந்தது. ராஞ்சி வானிலை ஆய்வு மைய பொறுப்பாளர் அபிஷேக் ஆனந்த் கூறியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்று முதல் ஏழு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை குறைந்துள்ளது.
அதேநேரத்தில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு – காஷ்மீர்
வடக்கு காஷ்மீர் குரேஸ் மற்றும் லடாக்கின் திராஸ் ஆகிய இடங்களில் லேசான பனிப்பொழிவு இருந்தது. ஆனால் பனி குவியவில்லை.
வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை உயர்ந்துள்ளது. ஸ்ரீநகரில் நேற்று முன் தினம் இரவு குறைந்தபட்ச வெப்பநிலை 0.2 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இதுவே முதல்நாள் இரவு மைனஸ் 4 டிகிரியாக இருந்தது.
காசிகுண்ட் – மைனஸ் 2, குல்மார்க் – மைனஸ் 1, பஹல்காம் – மைனஸ் 0.6, கோகர்நாக் – மைனஸ் 1.2, குப்வாரா – மைனஸ் 0.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ரயில் மோதி சிறுமி பலி
உத்தர பிரதேச மாநிலம் ஜலான் நகரில் வசிக்கும் வர்ஷா,18, கஜோல்,17 ஆகிய இருவரும் ஓரையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்தனர். நேற்று காலை அஜ்னாரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது, கடும் பனிமூட்டம் காரணமாக அந்த தண்டவாளத்தில் ரயில் வந்ததை அவர்களுக்கு தெரியவில்லை.ரயில் மோதி அதே இடத்திலேயே கஜோல் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த வர்ஷா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்