லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள், `இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கவிருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி என 28 கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டணியில், தற்போது அடுத்தகட்டமாக சீட் பகிர்வு பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. அதோடு, ஒரு வழியாக கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டிருக்கிறார். இடையில், நிதிஷ் குமாருக்கு அதிருப்தி இருப்பதாகப் பேச்சுகள் வந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவொருபக்கமிருக்க, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை எதிர்த்து வரும் முன்னாள் முதல்வர் மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜ், இந்தியா கூட்டணியில் ஆரம்பம் முதலே இடம்பெறவில்லை. `அவர்கள்தான் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் தனித்தே போட்டியிடுவோம்’ என மாயாவதி வெளிப்படையாகவே கூறினார். இந்த நிலையில், 2024-ல் தனித்து களமிறங்குவோம் என உறுதியாகக் கூறியிருக்கும் மாயாவதி, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “கூட்டணியால் நாங்கள் நிறைய இழப்புகளைச் சந்தித்திருக்கிறோம். இதன் காரணமாக, நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியமைக்க விரும்புகின்றன. எனவே கூட்டணி குறித்து தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம். வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தனது ஆதரவை வழங்கலாம். அதற்கு முன் தேர்தலில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், முஸ்லிம்களின் ஆதரவுடன், 2007-ல் உத்தரப்பிரதேசத்தில் முழு பெரும்பான்மை அரசாங்கத்தை நாங்கள் அமைத்தோம், அதனால்தான் லோக் சபா தேர்தலில் தனித்து போட்டியிட முடிவுசெய்திருக்கிறோம். சாதிவெறி, வகுப்புவாதம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து தள்ளி நிற்போம். பகுஜன் சமாஜுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க முழு பலத்துடன் செயல்படுவோம்” என்றார்.

மேலும், தன் மருமகனை தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்ததையடுத்து அரசியலிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா என்ற பேச்சுக்குப் பதிலளித்த மாயாவதி, “கடந்த மாதம், ஆகாஷ் ஆனந்தை எனது அரசியல் வாரிசாக அறிவித்தேன். அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து விரைவில் நான் ஓய்வு பெறுவேன் என்று ஊடகங்களில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அது அப்படியில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் 2007 முதல் 2012 வரை முழுமையாக ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்த மாயாவதி, தற்போது அங்கு மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.