டாவோஸ் : உலக பொருளாதார அமைப்பின், 54வது ஆண்டு கூட்டம், டாவோசில் இன்று துவங்குகிறது. இதில், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், தொழில் துறையினர் என, 100க்கும் மேற்பட்டோர், இந்தியாவின் சார்பில் பங்கேற்கின்றனர்.
அரசு – தனியார் ஒத்துழைப்பை உறுதி செய்யும் சர்வதேச அமைப்பான, உலக பொருளாதர அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், மாநாடு நடத்துகிறது. இதில், உலகத் தலைவர்கள் பங்கேற்று, சர்வதேச பொருளாதார பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பர்.
இதன், 54வது ஆண்டு கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், இன்று துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து, 2,800க்கும் மேற்பட்ட தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்தாண்டு மாநாட்டில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, சுற்றுச்சூழல் பிரச்னை, பொய் செய்திகள், சில நாடுகளில் நடக்கும் போர்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பல நாடுகளில் உள்ள பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுக்கு இடையே, வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகும்.
இந்த மாநாட்டில், நம் நாட்டின் சார்பில் மூன்று மத்திய அமைச்சர்கள், மூன்று மாநில முதல்வர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஸ்மிருதி இரானி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி ஆகிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரசை சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, சிவசேனாவைச் சேர்ந்த மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க உள்ளனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உத்தர பிரதேசம், தமிழகம், தெலுங்கானா மாநில அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
கவுதம் அதானி, சஞ்சிவ் பஜாஜ், குமார் மங்கலம் பிர்லா, என். சந்திரசேகரன், ரோஷிணி நாடார், நந்தன் நீல்கேனி, ரிஷாத் பிரேம்ஜி உள்ளிட்ட தொழிலதிபர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தாண்டு கூட்டத்தில், 40 நாடுகளின் நிதி அமைச்சர்கள், 16 மத்திய வங்கி கவர்னர்கள், 30 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், சீன பிரதமர் லீ கியாங்க், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
உக்ரைன் குறித்து ஆலோசனை
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு கட்டமாக, உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், இது தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் நான்காவது கூட்டம் இது.ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில், பேச்சின் வாயிலாகவே தீர்வு காண வேண்டும். போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்