ப்ரியட் ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி திரையரங்குகளில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘கேப்டன் மில்லர்’.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சிவராஜ் குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கிறது இப்படம். பிரிட்டிஷ் காலத்தை காட்சிப்படுத்துவதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் அபரிமிதமான உழைப்பை இப்படத்திற்குச் செலுத்தியிருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பதிவாளரின் நிலபரப்பை சுற்றித் திரியும் ப்ரேம்களும், படத்தொகுப்பாளரின் ஷார்பான கட்களும் பலரை ஈர்த்திருக்கிறது.

இப்படத்தின் படத்தொகுப்பாளர் நாகூரான் ராமசந்திரனை சந்தித்துப் பேசினோம்.
அவர், “கேப்டன் மில்லர் படத்துக்கு கிடைச்சிருக்கிற வரவேற்பு சந்தோஷத்தை கொடுத்து இத்தனை நாள் வேலைப் பார்த்த டையர்ட்டை மறக்க வைக்குது. அருண் மாதேஸ்வரனோட எழுத்து வேலைகளிலேயே அதிகளவில மெனக்கெடல் இருக்கும். அவரோட திரைக்கதைக்கு நான் எப்போதும் ரசிகன். அவர் ஒரு சீனை எடுத்துட்டு வந்ததும் ‘இந்த சீனை நான் இப்படிதான் எடுத்திருக்கேன்’னு மொத்தமாக விளக்கம் கொடுத்துருவாரு. அப்போவே நமக்கு எடிட் பண்றதுக்கு ஒரு ஐடியா கிடைச்சுடும். அவர் சரியாக வேலையும் வாங்குவாரு. அதையும் ரொம்பக் கட்டாயப்படுத்தி, அழுத்தம் கொடுத்து வேலை வாங்கமாட்டார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனோட மனைவி ரஞ்சினி எனக்கு ப்ரண்ட். அவங்க மூலமாகதான் எனக்கு அருணைத் தெரியும். படம் தொடர்பான என்ன சந்தேகம் வந்தாலும் அவர்கிட்ட கேட்டுகிற மாதிரியான இடத்தைக் கொடுப்பார். என்னை அவர் ஒரு நடிகராகவும் பார்க்குறாரு. ‘ராக்கி’ படத்துல ஒருத்தர் பேரிச்சம் பழம் வித்துட்டு இருப்பார். அந்த கதாபாத்திரத்துல நடிச்சது நான்தான்.

‘கேப்டன் மில்லர்’லையும் எனக்கு சீன் இருந்துச்சு. டைமிங் பிரச்னைல அந்த காட்சியை கட் பண்ணிட்டோம். அருண், நடிகர்கள்கிட்ட நடிப்பை சரியாக வாங்குவார். ‘கேப்டன் மில்லர்’ல காளி வெங்கட் சாருக்கு காட்சி இருக்கும். அந்த இடத்துல வசனம், பின்னணி இசைனு எதுவும் தேவைப்படாது. அந்த ஒரு ஷாட் மொத்தமாக விளக்கம் கொடுக்கும். இந்த மாதிரி பல விஷயங்கள் அருண் மாதேஸ்வரன் பண்ணுவார். அதை முதல் முறையாக நான்தான் பார்ப்பேன். அது ரொம்ப ஆர்வத்தை கொடுத்து வேலைப் பார்க்க வைக்கும். ‘இந்த ஒரு சீனுக்கு வேற ஷாட் இருந்தா நல்லா இருக்கும்’னு நான் யோசிப்பேன். அதுமாதிரியே அருண் எடுத்திருப்பார்.
தனுஷ் இந்த படத்தோட கதாபாத்திரமாக மாறுகிற தருணத்தை என்னால ரஷ்ல பார்க்க முடிஞ்சது. அழுகிற காட்சிகள்ல தனுஷ் கிளிசரின் இல்லாம நடிச்சிருக்கார். நான் சிவராஜ் குமாரோட மிக பெரிய ரசிகன். அவரைப் பார்க்கிறதுக்கு நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். அங்க ஒரு நாள் நான் மானிட்டர் பின்னாடி நின்னு பார்த்துட்டு இருந்தேன். பின்னாடி இருந்து ஒரு குரல் ‘அண்ணா அந்த சேர் எடுங்க’னு. பின்னாடி திரும்பி பார்த்தேன். என்னை ‘அண்ணா’னு கூப்பிட்டது சிவராஜ் குமார்தான். இவ்ளோ பெரிய நட்சத்திரம் நம்மள அண்ணானு கூப்பிடுறாருனு எனக்கு ஆச்சரியம். இவர்கிட்ட இப்படியான பணிவைப் பார்க்கும் போது ரொம்பவே வியப்பா இருந்துச்சு. ‘ராக்கி’ படத்துல சாப்டர் கட்டமைச்சு படத்தை நகர்த்தியிருப்போம். இந்த படத்துலையும் அப்படிதான். ஆனா, முதல்ல இதுமாதிரி சாப்டர் அடிப்படையில கொண்டு போகனும்னு திட்டமிடல. அருணுக்கு கட்டுரை மாதிரியான அடிப்படைல கதை சொல்ல ரொம்ப பிடிக்கும். ‘ராக்கி’ படத்துல ஒரு சீனுக்கு முன்னாடியே அந்த சாப்டரோட பெயரை காமிச்சுருவோம்.

இந்த படத்துல அந்த சீனை பத்தின ஒரு இண்ட்ரோ கொடுத்துட்டு அதுக்குப் பிறகு அந்த சாப்டர் பெயர் காட்டியிருக்கோம். இப்படி ஒவ்வொரு சாப்டர் வாரியாக அந்த கதையை எடுத்து சொல்றது ரொம்பவே ஆர்வத்தை கொடுக்கும். இந்த படத்துல ரெண்டு சீனை ப்ளாக் & வைட்ல காமிச்சிருப்போம். அருணுக்கு ப்ளாக் & வைட்ல ஒரு ஈர்ப்பு . ஒரு படத்தை முடிக்கும் போது இதோட அவுட் எனக்கு ப்ளாக் & வைட்ல வேணும்னு கேட்பார்.
இங்க எல்லோரும் இரத்தத்தை காட்டுறதுதான் வயலன்ஸ்னு நினைக்கிறாங்க. அருணோட புரிதல் வேற. ‘ராக்கி’ படத்துல ரோட் ரோலர்ல ஒருத்தரை ஏத்துவாங்க. அந்த இடத்துல இரத்தமே இருக்காது. ஆனா, அது வயலன்ஸ் சீன். வெறும் இரத்தத்தை மட்டும் காட்டுறது வயலன்ஸ் கிடையாது.
‘ராக்கி’, ‘சாணி காகிதம்’ படத்துல பழி வாங்குறதுதான் எண்ணமாக இருக்கும். ஆனா, இந்த படத்துல கதாநாயகனோட எண்ணமே வேற . அதுனாலதான் மற்ற படத்தைவிட இதுல வயலன்ஸ் குறைவு. சென்சார் போயிட்டு வந்ததுக்குப் பிறகு சில சீன்ஸ் கட் பண்ணோம். அதிக வன்முறை அப்படிங்கிற காரணத்துனால க்ளைமேக்ஸ்ல 4 நிமிடம் கட் பண்ணோம்.

இதுல ரெண்டு டெலிடட் சீன்ஸ் இருக்கு. ப்ரியங்கா மோகனுக்கும், ஜான் கொக்கனுக்குமான காட்சிகள்தான் அது. இந்த படத்துல குறிப்பாக ஜான் கொக்கன் ரொம்பவே பயங்கரமாக நடிச்சிருந்தார். எனக்கு அவரோட நடிப்பு ரொம்பவே பிடிச்சிருந்தது. ” எனப் பேசி முடித்தார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் !