De-aging: டீ-ஏஜிங் என்றால் என்ன? இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய டாப் படங்கள் ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. `ஏலியன்’ பொங்கலாக `அயலான்’ படத்தின் VFX நிச்சயமாக ஒரு மைல்கல் சாதனைதான்.

அதேபோல சமீபமாக சில தமிழ்த் திரைப்படங்களில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை – 2’, நடிகர் விஜய்யின் ‘The Greatest of All Time’ எனச் சில திரைப்படங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி சில பிளாஷ்பேக் காட்சிகளைத் தயார் செய்து வருகின்றனர். கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்திலும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், அது திருப்திகரமாக வரவில்லை, இன்னும் தாமதமாகும் என்பதால் ‘டீ- ஏஜிங்’ பயன்படுத்திய காட்சிகளைப் படத்தில் சேர்க்கவில்லை.

GOAT | The Greatest of All Time

இந்த டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறந்த அவுட்புட்டைக் கொடுத்த டாப் திரைப்படங்களை இங்கே பார்க்கலாம். (குறிப்பு: இது தரவரிசை பட்டியல் இல்லை).

தி கியூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன் (The Curious Case of Benjamin Button):

இயக்குநர் டேவிட் பிஞ்சர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பெஞ்சமின் பட்டன் கதாபாத்திரத்தில் நடிகர் பிராட் பிட் நடித்திருப்பார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் பிராட் பிட்டுக்கு வயது பின்னோக்கி நகர்ந்துச் செல்லும். அவரின் இளமை அடையும் தோற்றத்தைக் காட்சிப்படுத்துவதற்கு டீ – ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பார்கள். இப்படியான அதிநவீன தொழில்நுட்ப பணிகளுக்காக இப்படம் அதிகளவில் பாராட்டப்பட்டது.

The Curious Case of Benjamin Button | Ra.One

ரா.ஒன் (Ra.One):

கடந்த 2011-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம், ‘ரா.ஒன்’. இப்படத்தில் ‘ஜி.ஒன்’ என்கிற கேம் கதாபாத்திரத்திற்கு தன்னுடைய முகத்தை ஷாருக்கான் கொடுத்திருப்பார். அந்தக் கதாபாத்திரம் நிஜ உலகத்திற்கு வருகை தரும். இந்தக் கதாபாத்திரத்திற்கான ஷாருக்கான் முகத்தை இளைமையாக காட்சிப்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றது.

ஃபேன் (Fan):

2016-ம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஃபேன்’ திரைப்படத்திலும் டீ-ஏஜிங்கைப் பயன்படுத்தினார்கள். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அவர் ஓர் உச்ச நட்சத்திரமாகவும் அவரைப் போலவே தோற்றம் கொண்ட ரசிகனாகவும் இரண்டு ரோல்களில் அசத்தியிருப்பார். இந்த இரட்டை வேடங்களில் ரசிகனின் கதாபாத்திரத்திற்கு டீ-ஏஜிங் பயன்படுத்தப்பட்டது. இதை கிராபிக்ஸ் மற்றும் ப்ராஸ்தெடிக்ஸ் ஒப்பணை துணைக் கொண்டு சாதித்தனர்.

Captain America – Civil War | Fan

கேப்டன் அமெரிக்கா – சிவில் வார் (Captain America – Civil War):

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 13வது படமான ‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ படத்திலும் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். ‘அயர்ன் மேன்’ டோனி ஸ்டார்க் (ராபர்ட் டௌனி ஜூனியர்) கதாபாத்திரத்தை இளமையாகத் திரையில் கொண்டு வருவதற்கு இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வையாளர்களுக்கு சிறந்த அவுட்புட்டைக் கொடுத்தனர்.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் – டெட் மேன் டெல் நோ டேல்ஸ் (Pirates of the Caribbean – Dead Man Tell No Tales):

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ திரைப்படத் தொடருக்கு அளப்பரிய ரசிகர் கூட்டமிருக்கிறது. குறிப்பாக ஜானி டெப்பின் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரம் பலரின் ஃபேவரைட்! இந்தப் படத்தின் இப்பகுதியில் ஜானி டெப் கதாபாத்திரத்தின் சில பிளாஷ்பேக் காட்சிகளுக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பின்பற்றினார்கள். ஜாக் ஸ்பேரோவின் முன்கதையைச் சொல்லும் இதில், ஜானி டெப்பை இளமையாகக் காட்ட வேண்டுமென இதனைப் பயன்படுத்தினார்கள்.

Pirates of the Caribbean – Dead Man Tell No Tales | Captain Marvel

கேப்டன் மார்வெல் (Captain Marvel):

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) 21வது படமான ‘கேப்டன் மார்வெல்’ படத்திற்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றினார்கள். இப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களான சாமுவேல் ஜாக்சனும், கிளார்க் கெர்க்கும் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதைக்களம் 1995ல் நடப்பவையாக இருக்கும். அதனால் இவர்களுடைய முகத் தோற்றத்தை 23 வருடங்களுக்கு முன்பிருந்தது போல் மாற்ற வேண்டும் என இந்த டீ-ஏஜிங் பயன்படுத்தினார்கள். இந்த நடிகர்களை இளமையாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்ட படக்குழு, 90களில் வெளிவந்த இவர்களின் படத்தைப் பார்த்து ரெஃபரென்ஸ் எடுத்திருக்கின்றனர்.

ஜெமினி மேன் (Gemini Man):

நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகியிருந்தது ‘ஜெமினி மேன்’. இப்படத்தில் வில் ஸ்மித்தின் இளமை குளோன் கதாபாத்திரத்திற்காக டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜய்யின் ‘GOAT’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியான சமயத்தில் இத்திரைப்படத்தினை ஒப்பிட்டு பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

The Irishman | Gemini Man

தி ஐரிஷ்மேன் (The Irishman):

இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கேங்ஸ்டர் திரைப்படமாக ‘தி ஐரிஷ்மேன்’ வெளியாகியிருந்தது. இப்படத்தில் ராபர்ட் டி நிரோ, அல்பாசினோ, ஜோ பெசி ஆகியோர் வயதான கதாபாத்திரங்களாகத் தோன்றி அதிரடியாக நடித்திருப்பார்கள். இவர்களை பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையாகக் காட்சிபடுத்த வேண்டுமென டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

ஆச்சார்யா (Acharya):

நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதிலும் சிரஞ்சீவியின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

Acharya | Laal Singh Chaddha

லால் சிங் சத்தா (Laal Singh Chaddha):

‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக ஆமிர் கான் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவராகவே இப்படத்தில் கேமியோ செய்திருப்பார். அவரின் இளமைத் தோற்றத்திற்காக இப்படத்தில் ‘டீ-ஏஜிங்’ பயன்படுத்தப்பட்டது.

இண்டியானா ஜோன்ஸ் அண்டு தி டையல் ஆஃப் டெஸ்டினி (Indiana Jones and the Dial of Destiny):

‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தொடரின் நாயகன் ஹாரிசன் ஃபோர்டை இப்படத்தில் இளமையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என இதில் டீ – ஏஜிங் தொழில்நுட்பத்தை நாடியிருந்தார்கள். இதில் சில பிளாஷ்பேக் காட்சிகளில் இந்தத் திரைப்படத் தொடரின் முதல் மூன்று பாகங்களைப் போல ஹாரிசன் ஃபோர்ட் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள்.

Indiana Jones and the Dial of Destiny

இந்த லிஸ்ட்டைத் தவிர உங்களுக்குத் தெரிந்து டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய திரைப்படங்கள் சிலவற்றை கமென்ட் செய்யுங்களேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.