வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும் நடைமுறை இன்று துவங்குகிறது. இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது.
முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், ‘காகஸ்’ எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, அயோவா மாகாணத்தில் இருந்து, இந்த தேர்தல் துவங்கும்.
இந்தாண்டுக்கான காகஸ் தேர்தல், குடியரசு கட்சியில் இன்றும், ஆளும் ஜனநாயகக் கட்சியில் நாளையும் நடக்க உள்ளது. ஜனநாயகக் கட்சி யில், அதிபர் ஜோ பைடன் முக்கிய போட்டியாளராக உள்ளார். குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய போட்டியாளராக உள்ளார்.
அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளிகளான, ஐ.நா.,வுக்கான முன்னாள் துாதர் நிக்கி ஹாலே, தொழிலதிபரான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர்.
இதுவரை நடந்து வந்த பிரசாரங்களின்போது, சக போட்டியாளர்களான டொனால்டு டிரம்பும், விவேக் ராமசாமியும், பரஸ்பரம் விமர்சிக்கவில்லை.
அயோவா மாகாணத்தில் கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் காகஸ் நடக்க உள்ள நிலையில், ‘டிரம்பை காப்பாற்றுங்கள்; விவேக்குக்கு ஓட்டளியுங்கள்’ என்ற பிரசாரத்தில் விவேக் ராமசாமி தரப்பினர் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”விவேக் ராமசாமி பிரசாரத்தை நன்கு துவக்கினார். ஆனால், தற்போது கீழ்த்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாட்டின் மிகச் சிறந்த அதிபராக இருந்த நான், எந்த காலத்திலும் சிறப்பான அதிபராக இருப்பேன். ஆனால், விவேக்கால் அது முடியாது. அவருக்கு ஓட்டளிப்பது எதிர்தரப்புக்கு ஓட்டளிப்பதற்கு சமம்,” என, கூறியுள்ளார்.
இதைத் தவிர அவருடைய பிரசார குழுவினரும், விவேக் ராமசாமிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்