நடிகர் மகேஷ் பாபு, ஶ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘குண்டூர் காரம்’.
ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபு புகைபிடி்கும் போஸ்டர்களும், காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உச்ச நட்சத்திரங்கள் இதுபோன்று புகை, மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகளில் நடிப்பதை சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். அவ்வகையில் மகேஷ் பாபு இப்படத்தில் புகைபிடித்தல் காட்சிகளில் நடித்ததற்கானக் காரணம் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர்.

அதற்குப் பதிலளித்துள்ள மகேஷ் பாபு, “‘குண்டூர் காரம்’ படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. இப்படத்திற்காக முதல்முறை ஒரிஜினல் பீடி பயன்படுத்திய கொஞ்ச நேரத்தில் தலைவலியே வந்துவிட்டது. பிறகுதான் இந்த ஆயுர்வேத பீடியைக் கொடுத்தார்கள். அது நன்றாக இருக்கவே, படம் முழுவதும் அதையேப் பயன்படுத்தினோம்.நான் புகைபிடிக்கவும் மாட்டேன், அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்” என்று கூறியுள்ளார்.