உத்தரகன்னடா : பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையான உத்தரகன்னடா தொகுதியில், வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடும் காங்கிரஸ், பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரை இழுக்க முயற்சிக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு, ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., – ம.ஜ.த., ஆகியவை சுறுசுறுப்பாக தயாராகின்றன. சட்டசபை தேர்தலில் தோற்ற பா.ஜ., – ம.ஜ.த., லோக்சபா தேர்தலில் கைகோர்த்துள்ளன. இது காங்கிரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துத் தொகுதிகளிலும், திறமையான வேட்பாளர்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற, இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் இல்லாமல் திண்டாடுகிறது.
துணை முதல்வர் சிவகுமார், பா.ஜ., ம.ஜ.த., தலைவர்களை ஈர்த்து, லோக்சபா தேர்தலில் வேட்பாளராக்க முயற்சிக்கிறார். ஏற்கனவே பா.ஜ.,வுக்கு குட்பை கூறி, காங்கிரசில் ஐக்கியமான ஜெகதீஷ் ஷெட்டரை, தார்வாட் தொகுதியில் களமிறக்க வாய்ப்புள்ளது.
உத்தரகன்னடா பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை. இதில் தற்போது அனந்தகுமார் ஹெக்டே எம்.பி.,யாக பதவி வகிக்கிறார்.
இதுவரை தொகுதியில் தென்படாத இவர், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சுறுசுறுப்படைந்து தொகுதியை சுற்றி வருகிறார்.
தனக்கே சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள இவர், நாக்கை கட்டுப்படுத்தாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறார்.
இம்முறை உத்தரகன்னடா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க, துணை முதல்வர் சிவகுமார் திட்டம் வகுக்கிறார்.
ஆனால் இந்த தொகுதியில் போட்டியிட, காங்கிரசில் வலுவான வேட்பாளர் இல்லை. எனவே, பா.ஜ., – எம்.எல்.ஏ., சிவராஜ் ஹெப்பாரை, காங்கிரசுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிவராம் ஹெப்பார் இதற்கு முன்பு காங்கிரசில் இருந்தவர். கூட்டணி அரசில் அதிருப்தி ஏற்பட்டு, காங்கிரசை விட்டு பா.ஜ.,வுக்கு வந்தார்.
அமைச்சராகவும் இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் உத்தரகன்னடாவின், எல்லாபுரா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இவரை காங்கிரசுக்கு அழைத்து வந்து, உத்தரகன்னடா லோக்சபா தொகுதியில் களமிறக்க, சிவகுமார் முயற்சிக்கிறார்.
இதுகுறித்து, சிவராம் ஹெப்பாரிடம் பேச்சு நடத்திய சிவகுமார், “நீங்கள் காங்கிரசுக்கு வந்து, உத்தரகன்னடாவில் போட்டியிடுங்கள். உங்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, எங்களிடம் விட்டு விடுங்கள்,” என, வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு செல்வது குறித்து சிவராம் ஹெப்பார், எந்த பதிலும் கூறவில்லை. பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசுக்கு சென்று லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோற்றால், தன் இமேஜ் பாதிக்குமென, அவர் அஞ்சுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்