பிராக்டீஸ் பண்ணாம பாடுவாரு விஜய் – இசையமைப்பாளர் தேவா

இன்றைய சினிமா நடிகர்களில் பாடும் திறமையும் கொண்ட நடிகர்களில் விஜய் முதன்மையானவர். அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது அவரைப் பாட வைத்துவிட வேண்டும் என இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள்.

'லியோ' படத்தில் 'நான் ரெடிதான்…', 'வாரிசு' படத்தில் 'ரஞ்சிதமே…', 'பீஸ்ட்' படத்தில் 'ஜாலி ஓ ஜிம்கானா…', 'மாஸ்டர்' படத்தில் 'குட்டி ஸ்டோரி…', 'பிகில்' படத்தில் 'வெறித்தனம்' என கடந்த சில வருடப் பாடல்கள் மற்றும் அதற்கு முன் அவர் பாடிய சில பல பாடல்களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆரம்ப காலப் படங்களில் விஜய்யை முதன் முதலாக பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் தேவா. 1994ம் ஆண்டில் வெளிவந்த 'ரசிகன்' படத்தில் இடம் பெற்ற 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி' என்ற பாடல்தான் விஜய் பாடிய முதல் பாடல். அதன் பின் தேவா இசையில் அவரது இசையில் சில பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜா, ஏஆர் ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், சிற்பி, பரணி, எஸ்ஏ ராஜ்குமார், இமான், ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ்குமார், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், சந்தோஷ் நாராயணன், தமன் ஆகியோர் விஜய் படங்களுக்கு இசையமைத்த போது அவரைப் பாட வைத்துள்ளனர்.

விஜய்யை பாடகராக அறிமுகப்படுத்தியது பற்றி இசையமைப்பாளர் தேவா டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “ஆரம்ப காலத்துல எல்லா படத்துலயும் அவர் பாட்டு ஒண்ணு இருக்கும். பதினைஞ்சி, பதினாறு படத்துலயும் அவர் பாட்டு இருக்கும். நல்ல பாடகர் அவரு. நாங்க மியூசிக் ட்ரூப் வச்சிருந்த போது, விஜய் அம்மா ஷோபா பாடுவாங்க, நான் ஹார்மோனியம் வாசிப்பேன். விஜய் அப்ப சின்ன குழந்தை. அவங்க மாமா எல்லாருமே பாடகர்கள்தான். கீதாஞ்சலின்னு ஒரு குரூப் வச்சிருந்தாங்க அப்ப.

விஜய்க்கு வந்து சொல்லிக் கொடுத்த உடனே பாடுவாரு. டைம் எடுத்துக்கிட்டு, பிராக்டீஸ் பண்ணியெல்லாம் இல்ல. ஒரு பெரிய ஞானம் அவர்கிட்ட இருந்தது. அதனால என்ன கஷ்டமான பாட்டா இருந்தாலும் அவர் பாடுவாரு. நான் பாட வைக்கிறதுக்கு முன்னாடி அவர் பாட்டுப் பாடி நான் கேட்டதில்ல. அவங்க அம்மா ஷோபா கச்சேரி பண்ணுவாங்கன்னு அந்தக் காலத்துல தெரியும். ஆனால், பாட வைக்கும் போது அவர் பாடுவாங்க என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வழில வந்தவங்களுக்கு அந்த ஞானம் இருக்கும். அதை வச்சிதான் சொல்றோம். எப்படின்னா, அது வழி வழியா வரது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.