சிக்கமகளூரு : ”முதல்வர் சித்தராமையாவை எம்.பி., அனந்தகுமார் ஹெக்டே ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரவி தெரிவித்தார்.
சிக்கமகளூரு மாவட்டம், ஹிரேமகளூரில் உள்ள கோதண்ட ராமசந்திர சுவாமி கோவிலை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரவி சுத்தம் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெரியவர்களுக்கும், அவர்களின் பதவிக்கும் மதிப்பளிக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்தவர் ராமர். அனந்த குமார் ஹெக்டேயின் வேலை பாணி வித்தியாசமானது.
மற்றவர்களை புண்படுத்தும் கருத்தை நாங்கள் நியாயப்படுத்த மாட்டோம். சித்தராமையாவை நாயுடன் ஒப்பிடுவது தவறு. அதுபோன்று பிரதமர் குறித்து சித்தராமையாவின் பேச்சும் தவறானது. பெரியவர்கள் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும்.
ராமாயணம் இல்லாமல் இந்தியாவின் மகத்தான கலாசார வரலாறு முழுமை அடையாது.
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி, கோவில்களை துாய்மைப்படுத்த, பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
எங்கு துாய்மை இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதயம் சுத்தமாக இருந்தால், கடவுள் இருப்பார் என்ற நம்பிக்கையை பெரியவர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதன்படி செயல்படுவோம்.
கோவில்களில் ஜாதி, தீண்டாமை ஒழிய வேண்டும். கடவுள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கி உள்ளார்.
ஒவ்வொருவரிடமும் கடவுள் இருக்கிறார் என்று கூறும் வேதங்களையும், சனாதன தர்மத்தையும் பின்பற்ற வேண்டும்.
ஜாதி வெறியும் தீண்டாமையும் நாட்டை பலவீனப்படுத்தி உள்ளன. அதில் இருந்து அனைவரும் வெளியே வந்தால், நாடு உலகத்திற்கே குருவாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்