பெங்களூரு : ”நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கருவிகளை பயன்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடந்த மூத்த போலீஸ் அதிகாரிகளின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கிவைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
சமீப நாட்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும்.
போலீசார், மக்களுக்கு பதிலளிக்கக் கூடியவர்களாகவும், நட்பாகவும் இருக்க வேண்டும். போலீஸ் நிலையம் வருபவர்கள், போலீசார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தரமான விசாரணை நடத்தினால், தண்டனையின் அளவும் அதிகரிக்கும். குறைகளை சரி செய்ய வேண்டும். மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, விசாரணை நடத்த வேண்டும்.
குற்றப்பத்திரிகையை தாமதமாக தாக்கல் செய்வதால், தண்டனையும் குறைய வாய்ப்பாக அமைந்து விடுகிறது. எனவே, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
பகலில் குற்றங்கள் அதிகளவில் நடப்பதால், கண்காணிக்க வேண்டும். இதற்காக ‘பீட்’ போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு, ரவுடிகளையும் கண்காணிக்க வேண்டும். மேலும், வகுப்புவாத மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் – ஒழுங்கு நன்றாக இருந்தால் மாநிலம் வளர்ச்சி அடையும்.
போதையில்லா மாநிலம்
கர்நாடகாவை போதையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான 4,484 கிலோ கஞ்சாவும், 23 கிலோ போலி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதை பிப்ரவரி முதல் வாரத்தில் அழிக்க அனுமதி அளித்துள்ளோம்.
மாநிலத்துக்கு ‘கர்நாடகா’ என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதுபோன்று போலீஸ் துறைக்கு ‘கர்நாடகா’ போலீஸ் துறை பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன. இந்தாண்டு பொன்விழா கொண்டாட கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் துறைக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டேன். அனைத்து போலீசாருக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை உதவித்தொகையை, 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. முதலில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தினேன். போலீசாரிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை குறிப்பிட்டேன். சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருந்தால், மாநிலம் வளர்ச்சி அடையும். சமூகத்தில் நலிந்த பிரிவினரும், வீடுகளில் தனித்து வசிப்பவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தண்டனை அதிகரிப்பு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை முழுமையாக ஒடுக்கி, தண்டனையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், இந்த தோல்விக்கு டி.சி.பி.,க்களே பொறுப்பாவார்கள்.
போலீசாருக்கு நாங்கள் முழு சுதந்திரம் அளித்து உள்ளோம். அவர்களின் பணியில் மூக்கை நுழைக்க மாட்டோம். அதேவேளையில், இந்த சுதந்திரத்தை, தவறாக பயன்படுத்த கூடாது. மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.
தற்போது ஜாதியை பயன்படுத்தி, இடம் மாற்றம் பெறுவது போலீஸ் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கை. அவ்வாறு செய்ய வேண்டாம். நாம் மதச்சார்பற்ற நாடு. நம் அரசியல் அமைப்பின் விருப்பங்களை நாமே வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் குறித்து முதல்வர் சித்தராமையாவிடம், அதிகாரிகள் விளக்கினர். இடம்: பெங்களூரு.
ஏ.ஐ., – எம்.ஐ., தொழில்நுட்பம் அறிமுகம்
மாநாட்டில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் எம்.ஐ., என்ற இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். இந்த தொழில்நுட்பம், எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில் இருந்து வழக்கை தீர்ப்பது வரை அனைத்து நடவடிக்கைகளை அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு விசாரணை முறையையும் விரிவாக மேற்கொள்ளும் வகையில் போலீசாருக்கு உதவும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்