புதுடில்லி,மதுரையில், டாக்டரை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது கட்டுப்பாட்டில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில், ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தள்ளுபடி
தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த, அரசு டாக்டர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சில மாதங்களுக்கு முன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுக்களை, திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தன.
மேலும், அங்கித் திவாரிக்கு வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், அங்கித் திவாரி மீது அமலாக்கத் துறை தரப்பிலும் வழக்கு பதியப்பட்டது. அதில், ‘அங்கித் திவாரி யிடம் துறை ரீதியாக விசாரிக்க வேண்டும். குறிப்பாக, அவர் லஞ்சம் வாங்கியது உண்மை தானா என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டிஉள்ளது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், கடந்த 12ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எதிர்பார்ப்பு
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘அங்கித் திவாரியிடம் துறை ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்