எதிர்ப்பு காரணமாக வடக்குப்பட்டி ராமசாமி வீடியோவை நீக்கிய சந்தானம்

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. ஏற்கனவே சந்தானத்தை வைத்து டிக்கிலோனா என்கிற படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. வழக்கம் போல நகைச்சுவை பாணியில் இந்த டிரைலர் உருவாகி இருந்தாலும் இதில் சந்தானம் பேசும் வசனம் ஒன்று சோசியல் மீடியாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த டிரைலரில் யாரோ ஒரு நபர், “கடவுள் இல்லை என சொல்லிக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பானே அந்த ராமசாமியா நீ ?” என்று கேட்க அதற்கு சந்தானம் நான் அந்த ராமசாமி இல்லை என்று பதில் சொல்கிறார். இது ஈவே.ராமசாமி குறித்து சந்தானம் விமர்சித்து வசனங்களை வைத்துள்ளதாக சோசியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தானத்திற்கு எதிர்ப்பும் எழுந்தது.

இது போதாது என்று சந்தானம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் இதேபோன்று அவர் தனது முகத்தை கேமரா பக்கமாக திருப்பி நான் அந்த ராமசாமி இல்ல என்று சொல்லும் ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். இதனால் அவருக்கு மேலும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்புகள் வலுக்கவே ஒரு கட்டத்தில் சந்தானம் தனது வீடியோ பதிவை நீக்கிவிட்டார். இனி படத்தில் இந்த வசனம் இடம் பெறுமா பெறாதா என முடிவு செய்வதற்குள் என்னென்ன பிரச்னைகள் வரப்போகிறதோ தெரியவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.