காவு வாங்கும் AI… அச்சுறுத்தும் பணிநீக்கம்… அடுத்த அதிரடிக்கு தயாராகும் கூகுள்!

Layoff In January 2024: புத்தாண்டு தொடங்கி இன்றோடு (ஜன.18), 17 நாள்கள் கடந்துள்ளது. இந்த காலகட்டத்தில், அதாவது முதல் 14 நாள்களில் மட்டும் குறைந்தபட்சம் 46 ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 7,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல்கள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்தது.

AI பறித்த வேலைகள் எவ்வளவு தெரியுமா?

உற்பத்தி செய்யும் AI (GenAI) தொழில்நுட்பம்தான் இத்தனை பேரின் பணிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எனவும் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் விடுமுறைக் காலத்திலும் தொடர்ந்த உலகளாவிய பணிநீக்க நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை இந்திய பணியாளர்களை பாதிக்கும் எனவும் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

layoff.fyi என்ற இணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 46 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 7,528 ஊழியர்களை (கடந்த ஜனவரி 14ஆம் தேதி வரை மட்டும்) பணிநீக்கம் செய்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தொழில்நுட்பத் துறை வேலைக் குறைப்புகளை கண்காணிக்கும்.

புத்தாண்டிலும் ஷாக்

உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்கள் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் 4 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தன என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த பணிநீக்க நடவடிக்கைகளில் இந்தியாவில் மட்டும் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்லைன் வாடகை தளமான Frontdesk, இந்த புத்தாண்டில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த முதல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். அதன் 200 பணியாளர்கள் இரண்டு நிமிட கூகுள் மீட் அழைப்பின் போது பணிநீக்கம் செய்யப்பட்டது. இதேபோன்று, கேமிங் நிறுவனமான யூனிட்டி சுமார் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சுந்தர் பிச்சை சூசகம்

அந்த வகையில், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையின் பெயரிடப்பட்ட மெமாவில் பணநீக்கம் குறித்து அவர் கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில்,”நம்மிடம் லட்சிய இலக்குகள் உள்ளன. மேலும் இந்தாண்டு பெரிய முன்னுரிமைகளில் முதலீடு செய்வோம். உண்மை என்னவென்றால், இந்த முதலீட்டிற்கான திறனை உருவாக்க, நாம் கடினமான முடிவுகளை செய்ய வேண்டும்” என்றார்.

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பிச்சை பேசினார். ஆனால் பணிநீக்கம் (Layoff) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவேயில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்குப் பதிலாக ‘மறுசீரமைத்து’ (Reallign), அகற்ற வேண்டியதன் (Eliminate) அவசியத்தை அதில் பரிந்துரைத்தார். 

அதாவது, நிறுவனத்திற்கு தேவையில்லாத இவர்களை நீக்கிவிடுவோம் என்பது சுற்றிவளைத்து சொல்லி உள்ளார் எனலாம். மேலும், “நிறுவனத்தின் சில பகுதிகளில் செயல்படுத்தலை எளிதாக்குவதற்கும், வேகத்தை அதிகரிப்பதற்கும் அடுக்குகளை அகற்ற வேண்டும்” என்றும் அவர் அந்த மெமோவில் குறிப்பிட்டுள்ளார். 

2024ஆம் ஆண்டு பணிநீக்கங்கள்

அமேசானுக்குச் சொந்தமான ஆடியோபுக் மற்றும் பாட்காஸ்ட் பிரிவு Audible ஆனது, e-commerce நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலைக் குறைப்பின் ஒரு பகுதியாக, அதன் ஊழியர்களில் 5 சதவிகிதம், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.

இந்த புத்தாண்டில் மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் சில தொழில்நுட்ப நிரல் மேலாளர்களை (TPMs) பணிநீக்கம் செய்தது. மேலும் இதுபோன்று குறைந்தது 60 பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன அல்லது அகற்றப்படுகின்றன என்று தகவல்கள் கூறப்படுகிறது. டிஸ்னிக்கு சொந்தமான அனிமேஷன் ஸ்டுடியோ பிக்சர் இந்த ஆண்டு வேலைகளை குறைக்க உள்ளது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. 

குளோபல் பேங்கிங் மேஜர் சிட்டி குரூப் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய கார்ப்பரேட் மறுசீரமைப்பில் அதன் பணியாளர்களில் 10 சதவிகிதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் வரை பணநீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.