தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷண் விருது?

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும், பாலசந்தர் இயக்கிய '47 நாட்கள்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்தவர். சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்ற சிரஞ்சீவி பின்னர் தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகனாக வளர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போதும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பிரஜா ராஜ்ஜியம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து பின் அந்தக் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து எம்பி தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பின் தீவிர அரசியலிலிருந்து விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியையொட்டி அறிவிக்கப்பட உள்ள மத்திய அரசின் விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது சிரஞ்சீவிக்கு அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு சிரஞ்சீவி 2006ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.