ஏப்ரல் மாதம் `இந்தியன் 2′ வரும் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. லைகாவின் முக்கியமான படைப்பாக இப்போதைக்கு இந்தப் படம் இருக்கிறது. படத்தில் இருக்கிற அத்தனை பேரும் கமலோடு அவர்களுக்கு இருக்கும் கேரக்டர் பற்றி அவ்வளவாக வாய் திறக்க மறுக்கிறார்கள். `இந்தியன் 3’யை உருவாக்கி விடலாம் என்கிற அளவுக்கு நம்பிக்கையை `இந்தியன் 2′ தந்துவிட்டது.
படத்தை ஆரம்பிக்கும் போது மூன்றாவது பாகத்திற்கான எண்ணமே இல்லை என்பதுதான் உண்மை. எடுத்துக் கொண்டு வரும்போது அடுத்தடுத்து ஷங்கருக்கு வந்த ஐடியாக்களில் கமல் புத்துயிர்ப்போடு நடித்துக் கொடுத்ததில் நீண்டுவிட்டது. மூன்றாவது பாகம் முடிப்பதற்கு கமலின் ஒத்துழைப்பு மட்டுமே முக்கியமாக வேண்டும் என்ற நிலைமையில் கமல் தேதிகள் தராமல் மூன்றாவது பாகத்திற்குச் சம்மதம் மட்டும் சொல்லியிருக்கிறார். அதற்கான தேதிகள் விரைவில் ஒதுக்கப்படலாம்.

இது இப்படியிருக்க ‘இந்தியன் 2’ இப்போது வெளியீட்டுக்குத் தயாரா என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. கமலின் கடும் உழைப்பு, பெரும் நட்சத்திரங்கள், தேர்ந்தெடுத்த டெக்னீசியன்கள் என ஸ்கிரிப்ட்டுக்கே அதிக நாள் எடுத்துக்கொண்டு ஷங்கர் செதுக்கிய படம்தான் இது. ரெடியாகிவிட்டது என அடுத்தடுத்து வெளிவரும் செய்திகளில் சென்று, இன்னும் ஆழமாக விசாரணை நடத்தினோம்.
படத்தின் எடிட்டிங் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்து ஷங்கர் அதைச் செதுக்க வேண்டியிருக்கிறது. அவர் எடுத்துவரும் ‘கேம் சேஞ்சர்’ தெலுங்குப் படத்தை முடித்துவிட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ‘இந்தியன் 2’ பைனல் எடிட்டிங்கில் உட்கார்கிறார். கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவு பெற்று கைக்கு வந்து சேரவில்லை. அதன் தரம், பொருத்தம் பார்த்துவிட்டு அந்த வேலையும் நிறைவு பெறும்.
இறுதியாக டயலாக் போர்ஷன் எல்லாமே முற்றாக முடிந்துவிட்டது. ஆனால் முக்கியமான மூன்று பாடல்களைப் படமாக்க வேண்டியிருக்கிறது. எல்லாமே உள்நாட்டில்தான் படமாக்கப்படவிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பாகவே படப்பிடிப்பை முடித்துக் கொள்ளலாமா பிறகு வைத்துக் கொள்ளலாமா என்பதை பிப்ரவரி முதல் தேதி வாக்கில் முடிவு செய்யவிருக்கிறார்கள்.

ஆக, தேர்தலைப் பொருட்படுத்தாமல் கமல் இருபது நாள்களாவது கொடுத்தால் ஏப்ரல் – மே மாதத்தில் `இந்தியன் 2’வை தியேட்டரில் தரிசிக்க நிச்சய வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் ஷூட்டிங் நடந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும்.