பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, கால்தவறி கீழே விழுந்ததில் அவர் தலைமீது வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராஜபாளையம் அருகே உள்ள சோலைச்சேரியை சேர்ந்தவர்கள் பெருமாள்- விஜயசாந்தி தம்பதியினர். இந்த தம்பதியரின் இரண்டாவது மகள் சாய் ஷிவானி (வயது 5). பெருமாள், இந்திய ராணுவத்தில் மருத்துவ பணியாளராக உள்ளார். விஜயசாந்தி, தளவாய்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சிறுமி ஷிவானி, ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் உள்ள ஆண்டாள்புரத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்துவந்தார். ஊருக்குள் பள்ளிப் பேருந்து வந்து செல்ல வசதி இல்லாத காரணத்தால், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக குழந்தைகளின் பெற்றோர்கள் இணைந்து வாடகை வேன் ஏற்பாட்டின் மூலமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர்.

அதன்படி, வழக்கம்போல பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிய சிறுமி ஷிவானி, வண்டியை விட்டு இறங்கும்போது கால்தவறிக் கீழே விழுந்துள்ளார். இதை அறியாத வேன் ஓட்டுநர் ஜெகதீஸ்வரன், வேனை இயக்கியிருக்கிறார். அப்போது சிறுமியின் தலையில், வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஷிவானி ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த சேத்தூர் காவல் நிலைய போலீஸார், விபத்து குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து வேன் ஓட்டுநரான கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனை கைதுசெய்தனர்” என்றனர்.