
சைரன் ரிலீஸில் மாற்றம் : நேரடியாக தியேட்டர்களுக்கே வருகிறது
கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் இறைவன் ஆகிய படங்கள் ஜெயம் ரவிக்கு கைகொடுக்க தவறின. இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள சைரன் திரைப்படம் ரிலீஸுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. அதேசமயம் அவரது படங்களின் தொடர் தோல்வியால் சைரன் படத்திற்கான ரிலீஸில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சைரன் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளத்திலேயே வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியானது. இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படமும் இதேபோன்று நேரடியாக தொலைக்காட்சியிலேயே வெளியானது.
இந்த நிலையில் தற்போது சைரன் திரைப்பட வெளியீட்டில் திடீர் மாற்றமாக இந்த படம் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி நேரடியாக திரையரங்குகளிலேயே ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.