தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், நடிகருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி மறைந்தார்.
இந்நிலையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு நினைவேந்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகரும் முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்படி ஒரு நிகழ்வில் நாம் கலந்து கொள்வோம் என வாழ்நாளில் நினைத்திருக்க மாட்டோம். பலருக்கும் மாபெரும் இழப்பு இது. ‘புலன் விசாரணை’ படத்தில் நான் அவருடன் நடித்திருந்தேன்.

இப்படத்தின் படப்பிடிப்பின் வேளையில் எனக்கு அடிபட்டுவிட்டது. என்னிடம் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு விஜயகாந்த் கூறினார். நான் மருந்து எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டேன். அப்போது விஜயகாந்த் என்னிடம் கடிந்து கொண்டார். ‘புலன் விசாரணை’ படத்தின் ரிலீஸுக்கு முன்பு என்னிடம் விஜயகாந்த், ‘இந்தப் படத்துல முதல்ல உங்களுக்குத்தான் பேரு கிடைக்கும். அதுக்கப்புறம்தான் மத்தவங்களுக்கு’ எனப் பெருந்தன்மையாகக் கூறினார். அவரிடம் வள்ளல் குணம், பணிவு எனக் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன” என்றார்.