இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் மற்றும் ஈரானின், பரஸ்பர ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில், அந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், தொலைபேசியில் நேற்று பேசினர். அப்போது, பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
ஏவுகணை தாக்குதல்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின், சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானில், ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, அதன் அண்டை நாடான ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இரு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானில் பாக்., நடத்திய ஏவுகணை தாக்குதலில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இதனால், பாக்., – ஈரான் இடையே பதற்றமான சூழல் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் -அப்துல்லாஹியனுடன் தொலைபேசியில் பேசினார்.
பதற்றமான சூழ்நிலை
அப்போது, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு உணர்வின் அடிப்படையில், அனைத்து விவகாரங்களிலும் ஈரானுடன் இணைந்து பணியாற்ற, பாக்., தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரானில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த பகுதியை கைப்பற்றும் எண்ணமில்லை என்றும், ஹொசைன் அமீர்- அப்துல்லாஹியனிடம், பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.
பாக்., – ஈரான் இடையே, கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்