பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரில், 17 ஏக்கர் தனியார் நிலத்தில், மாநகராட்சி அனுமதி பெறாமல் 303 மரங்களை வெட்டிய நில உரிமையாளர் உட்பட மூவருக்கு, மாநகராட்சி 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.
பெங்களூரு, பொம்மனஹள்ளியின், மல்லசந்திராவில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது.
இங்கு 300க்கும் மேற்பட்ட, வெவ்வேறு ரக மரங்கள் வளர்ந்திருந்தன.
இந்த நிலத்தில், ‘லே அவுட்’ அமைக்க, சதீஷ் முடிவு செய்தார்.
எனவே மரங்களை வெட்டும் பொறுப்பை, புட்டசாமி என்பவரிடம் கொடுத்திருந்தார்.
புட்டசாமியும் 303 மரங்களை வெட்டி சாய்த்தார். இதற்கு, மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெறவில்லை.
இது குறித்து, அப்பகுதியினர், பெங்களூரு மாநகராட்சி வனப்பிரிவில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், மரங்கள் வெட்டப்பட்டது தெரிந்தது.
எனவே, நில உரிமையாளர் சதீஷ், மரங்களை வெட்டிய புட்டசாமி, இங்கு லே அவுட் அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்த மாநகராட்சி, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வன பாதுகாப்பு அதிகாரி சாமி கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தனியார் நிலத்தில் வளர்ந்துள்ள மரங்களை வெட்ட வேண்டுமானாலும், மாநகராட்சி வனப்பிரிவிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
ஆனால், அனுமதி பெறாமல், 303 மரங்களை வெட்டியுள்ளனர்.
இது குறித்து, மூவர் மீது வழக்கு பதிவு செய்து, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.
வெட்டிய மரங்களை கொண்டு செல்ல பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்