இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள கூகி மற்றும் மெய்டி இனத்தவர் இடையே இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு மே 3ல் இனக்கலவரம் வெடித்தது. இதில், 180 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், மலைப்பகுதியில் இருந்து அதன் கீழ் உள்ள பகுதிக்குள் வசிப்பவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதற்கு தாழ்வான பகுதியில் உள்ள கிராம தன்னார்வலர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் கிராம தன்னார்வலர் மனோரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து நேற்று இம்பாலில் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மணிப்பூர் கவர்னரால் மத்திய, மாநில படைகளின் ஒருங்கிணைந்த பிரிவு தலைவராக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட குல்தீப் சிங்கை பதவி நீக்க கோரிக்கை விடுத்தனர்.
இதை வலியுறுத்தி இம்பாலின் மெயின் மார்க்கெட் பகுதியில் இருந்து, கவர்னர் மாளிகை நோக்கி ஏராளமான பெண்கள் பேரணியாக நேற்று சென்றனர்.
அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement