நடிகர் சங்க கட்டட நிதிக்காக மொய் விருந்து நடத்துங்கள் : மன்சூர் அலிகானின் புதிய ஐடியா

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்த நடிகர் சங்கத்தை கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வந்த தொகையை வைத்து மீட்டுக் கொடுத்தார் அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த். இப்போது உள்ள நடிகர் சங்கம், நடிகர் சங்க கட்டடத்திற்கான புதிய வளாகத்தை கட்டுவதற்காக முயற்சியில் இறங்கி, அது இன்னும் முடியாமல் பாதியிலேயே நிற்கிறது. இந்த நிலையில் இந்த புதிய வளாகத்தை கட்டுவதற்கான நிதியை திரட்ட சின்னக் கவுண்டர் பட பாணியில் மொய் விருந்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

சமீபத்தில் மறைந்த விஜயகாந்தின் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த சமயத்தில் என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்துள்ளார்.

இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து, உபசரித்து மொய் விருந்து போன்று வைத்து பணம் வசூலிப்போம். அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். கேப்டன் வளாகத்தில் வருடம் தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.