புதுடெல்லி: ராமர் கோயில் திறப்பையொட்டி 11 நாள் விரதத்தை கடைபிடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், பசுக்களுக்கு உணவளித்தும், கட்டாந்தரையில் படுத்து உறங்கியும் தினந்தோறும் அவர் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருகிறார்.
அயோத்தியில் வரும் 22-ம்தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு, பிரதமர் 11 நாள் விரதத்தை அறிவித்து அதனை கடுமையாக பின்பற்றி வருகிறார்.
அதன்படி, வெறும் தரையில் படுத்து உறங்கி, இளநீரை மட்டுமே பருகி, கோ பூஜை செய்து, பசுக்களுக்கு உணவளித்து தினந்தோறும் விரதத்தை கடுமையாக கடைபிடித்து வருகிறார்.
விரதத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள முக்கிய கோயில்களுக்கு பிரதமர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மகாராஷ்டிராவின் ராம்குண்ட், ஸ்ரீ காலாராம் கோயில், ஆந்திர பிரதேசத்தின் லெபஷியில் உள்ள வீரபத்ரா கோயில், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில், திரிப்ராயர் ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் உட்பட ராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம்
அந்த வகையில், தமிழகத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் முயற்சியாக அதற்கான பிரச்சாரத்தையும் தாமே முன்னின்று தொடங்கி வைத்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி நாசிக்கில் உள்ள ஸ்ரீகாலாராம் கோயிலின் வளாகத்தை தானே சுத்தம் செய்து அந்தப் புனித பணியை தொடக்கிவைத்தார். இது, நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ராமரின் ஆட்சிக் கொள்கைகளால் தனது அரசு மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி வாக்குறுதிகளை மதிக்கும் பண்பை பகவான் ராமரே கற்றுக் கொடுத்ததாக தெரிவித்தார். ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்கவும் நிர்ணயிக்கப்பட்ட இலங்குகளை அடைய ராமரின் வழியைப் பின்பற்றி அதனை நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.