புதுச்சேரி: “தமிழகத்தில் இருந்து புனித நீரை எடுத்து சென்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் செய்வது தமிழகத்துக்கு பெருமை. தமிழகத்திலும் ராமர் தன்னை நிலை நிறுத்துவார்” என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முதலியார்பேட்டை பகுதி மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ அசோக்பாபு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பல கோடி ரூபாயில் அவசர சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட உள்ளது. ஒரு சில நேரங்களில் அதிகப்படியான மக்கள் நோயால் பாதிக்கப்படும் போது சில பிரச்னைகள் ஏற்படுகிறது. அதற்காக புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விரைவில் பிரச்னைகள் தீர்க்கப்படும். வரும் 24-ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் தொழில்நுட்பத்துடன் கல்வி கற்கும் போது இன்னும் சிறப்பாக படிப்பார்கள். இது மிகப்பெரிய கல்வி புரட்சி. அன்மையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நான் சந்தித்தபோது, புதுச்சேரியில் சிபிஎஸ்இ வகுப்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது என்று தனது மகிழ்வை பகிர்ந்து கொண்டார். அரசியல் இல்லாமல் மாணவர்களுக்கு எது வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சில மாநிலங்களில் கல்வியில் அரசியலை புகுத்தி இந்த மொழியை படிக்காதே, அந்த மொழியை படிக்காதே என்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருமொழி கொள்கை என்று சொல்கின்றனர்.
தனியார் பள்ளிகள் அத்தனையிலும் இந்தி கற்பிக்கப்படுகிறது. அப்போது, தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வரும்போது இந்தி தெரியும். ஆனால் அரசு பள்ளியில் இருந்து மாணவரகள் வெளியே வரும்போது அவர்களுக்கு இந்தி தெரியாது. அப்படியானால் சமமான சமச்சீர் கல்வி கிடையாது. ஆகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் என்னென்ன இருக்கிறதோ, அதனை கொடுத்தால் தான், தனியார் பள்ளி மாணவர்களை போல் அரசு பள்ளி மாணவர்களும் சிறந்து விளங்குவார்கள். ஆகவே அதனை அரசியலாக்க வேண்டாம்” என்றார்.
அப்போது சேலம் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டில் இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக தான் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “அந்த அரசியல் கட்சி மாநாட்டு தீர்மானத்தில் பேச விருப்பப்படவில்லை என்றாலும், இந்துக்களுக்கு எதிரான என்று சொன்னால், அந்த கட்சியின் தலைவர் ஏன் இந்துக்களுக்கு தீபாவளி, விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. அப்படியானால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள்.
80 சதவீதம் மக்களுக்கு நம்பிக்கை இருக்கும்போது நீங்கள் அதனை ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் வாழ்த்து சொல்ல வேண்டும். அப்படியானால் அவர்கள் தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. சனாதனத்தை தவறாக விமர்சிக்கின்றனர். அதனை அவர்கள் தவறாக புரிந்து வைத்திருக்கின்றனர். அதேபோன்று 500 ஆண்டுகாலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தற்போது சமத்துவம், சம ஒற்றுமை ஆகியவற்றிற்கு உதாரணமாக அயோத்தி உள்ளது. ஆனால் பழைய கதைக்கே திரும்பவும் அவர்கள் எடுத்து வருகின்றனர்.
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகத்தில் தங்கி, இங்கிருந்து புனித நீரை எடுத்து சென்று கும்பாபிஷேகம் செய்வது தமிழகத்துக்கு பெருமை. யார் வேண்டுமானாலும் இன்று பிரதமரை வரவேற்றுத்தான் ஆக வேண்டும். கோ பேக் என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள போவதில்லை. நான் எழுதிய கவிதையை இணையத்தளத்தில் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையால் அவசர சிகிச்சை பிரிவு இயங்காது என்று இல்லை.
அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ சிகிச்சை உள்ளிட்டவைகள் வழக்கம் போல இயங்கும். இந்த ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் அரசு விடுமுறை அளித்துள்ளது. சொந்த இடத்துக்கு ராமர் திரும்ப செல்கிறார். தமிழகத்திலும் ராமர் தன்னை நிலை நிறுத்துவார்” இவ்வாறு அவர் கூறினார்.