மும்பை: பிவிஆர்-ஐனாக்ஸ் சினிமா நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் இளஞ்சிவப்பு நிற கற்களால் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை நேயர்கள் பெரிய திரையில் காணும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம்.
நாடு முழுவதும் 70 நகரங்களில் உள்ள எங்கள் திரையரங்குகளில், டி.வி. சேனல் மூலமாக நேரடியாக ஒளிபரப்பப்படும் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை காணலாம்.
இந்த நேரடி ஒளிபரப்பு காலை11 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். பாப்கான், குளிர்பானத்துடன் சேர்த்து, இதற்கான கட்டணம் ரூ.100 என நிர்ணயித்துள்ளோம். இந்த டிக்கெட்டுகளை பிவிஆர் ஐனாக்ஸ் செயலி அல்லது இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
இது குறித்து பிவிஆர் ஐனாக்ஸ் நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், ‘‘நாடு முழுவதும் நடைபெறும் ஒரு கூட்டு கொண்டாட்டத்தின் உணர்வுகளுக்கு சினிமா திரைகளில் உயிர் கொடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பம்,பாலிவுட் நடிகர் அபிதாப் பச்சன், வெளிநாட்டு பிரபலங்கள் உட்பட விஐபி.க்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.