புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: அனைத்து பக்தர்களுக்கும் விரிவானத் தன்மையுடன் முறைப்படுத்தப்பட்ட அனுமதியை அளிக்க விரும்புகிறோம். பொது மக்களுக்கான தரிசனம் ஜனவரி 23 முதல் தொடங்கும். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அதன் ஒத்த கருத்துள்ள அமைப்பினருக்கு ஜனவரி 26 முதல் தரிசனம் தொடங்கிறது.
இதுபோன்ற பக்தர்களால் கூட்ட நெரிசலையும் தவிர்ப்பதற்காக ராமர் கோயிலின் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம், குளிரையும் பொருப்படுத்தாமல், திரளான எண்ணிக்கையில் வரும் பக்தர்களை சமாளிக்க முடியும். ஒரு நாட்டுக்கு ஒருவர் எனும் வகையில் 53 வெளிநாடுகளிலிருந்து அதன் பிரதிநிதிகளும் அயோத்தி தரிசனத்திற்கு வர உள்ளனர். இவர்களது நெடுந்தூர விமானப் பயணம் மற்றும் வானிலையை கருதி ஒரே நாளில் அவர்கள் தரிசனம் முடித்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதனிடையே, புனித நகரமான அயோத்தியின் ஆன்மிக சூழலை பாதுகாக்க வேண்டி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உத்தரபிரதேச அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில், உ.பி. மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.
இத்துறையின் அமைச்சரான நிதின் அகர்வால், அயோத்தி நகரம்மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளார்.
அமைச்சர் உத்தரவின் பேரில் அயோத்தி நகரை சுற்றியுள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இத்துடன் அப்பகுதிகள் முழுவதிலும் மது அருந்தத் தடைவிதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முன்பாக பிரதமர்: இந்த ஆண்டு குளிர்காலம் அதிகநாட்களுக்கு நீட்டிப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, வடமாநிலங்களில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் நீடிக்கிறது. இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக, பிரதமர் ஒருநாள் முன்பாக ஜனவரி 21-ம்தேதி (இன்று) அயோத்திக்கு வந்து சேர்கிறார். இதன் பின்னணியில், மோசமான வானிலையால் அவரது விமானம் தாமதமாகிவிடக் கூடாது என்பதே காரணமாக உள்ளது.