* ‘நாகரம்’ என்னும் கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டது அயோத்தி ராமர் கோயில். இதை வடிவமைத்தவர் குஜராத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா. வயது 77. இவரது மகன்கள் ஆஷிஷ், நிஹில் சோம்புரா இருவரும் இதன் வடிவமைப்பில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளனர்.
* ராஜஸ்தானில் உள்ள பான்ஷி மலையில் இருந்து 4.7 லட்சம் கனஅடி பிங்க் நிறக் கற்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
* கோயில் கட்டுமானத்தில் இரும்புக்கு பதிலாக கிரானைட் கற்கள், தாமிரம், வெள்ளை சிமின்ட், மரப்பலகை பயன்படுத்தப்படுகின்றன.
* ‘ஸ்ரீராம் 2023’ என பொறிக்கப்பட்ட 8.5 லட்சம் செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* இந்தியாவில் 2587 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* கோயில் வளாகத்திற்குள் 70 ஏக்கர் பரப்பில் 70 சதவீதம் பசுமை நிறைந்த பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
* முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், சக்கர நாற்காலியில் செல்லும் வசதி உள்ளது.
* ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பக்தர்களின் வாட்ச், அலைபேசி, செருப்பை பாதுகாப்பு அறைகளில் வைக்கலாம்.
* 1980 முதல் ராம ஜென்ம பூமி இயக்கத்தினர் இக்கோயிலுக்கு நன்கொடை வசூலித்துள்ளனர்.
* ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் எல் & டி நிறுவனம் இக்கோயிலைக் கட்டுகிறது.
சொர்க்கமே என்றாலும்அயோத்தி போல வருமா…
ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நவீன ஆன்மிக தலமாக மாறியுள்ளது. ராமர் கோயிலை தரிசிக்க தினமும் 3 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கின்றனர். அயோத்தியை விரிவுபடுத்த ரூ.85 ஆயிரம் கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ உருவாக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய விரிவாக்கம், வாட்டர் மெட்ரோ உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2031ல் பணிகள் நிறைவடையும்.
வால்மீகிக்கு கவுரவம்
அயோத்தியில் 20 மாதங்களில் புதிதாக மகரிஷி வால்மீகி சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 821 ஏக்கர். முதல் ‘டெர்மினல்’ ரூ.1450 கோடி செலவில் 65,0000 சதுரடி பரப்பில் உள்ளது. 2,200 மீ., ஓடுதளம் கொண்டது. ஏ-321 வகை விமானம் தரையிறங்கலாம். இரண்டாவது ‘டெர்மினல்’ 5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைய உள்ளது. அப்போது பெரிய ‘போயிங்’ ரக விமானத்தை தரையிறக்கலாம். ராமர் கோயிலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் இது அமைந்துள்ளது. ராமாயண காவியத்தின் முக்கிய அம்சங்கள் விமான நிலையத்தில் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன.
ஒளிரும் ரயில் நிலையம்
‘அயோத்தி கோயில் சந்திப்பு’ என்ற பெயரில் ரயில் நிலையம் ரூ.240 கோடி செலவில் 11,414 சதுர மீட்டர் பரப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. 3 மாடிகளைக் கொண்டது. முகப்பு பகுதி அயோத்தி ராமர் கோயில் பாணியில் அமைந்துள்ளது. எஸ்கலேட்டர்கள், டிஜிட்டல் வழிகாட்டும் பலகைகளுடன் விமான நிலையத்தை போன்று பிரமாண்டமாக உள்ளது.
படகு போக்குவரத்து
அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயூ நதியில் சூரிய சக்தியில் இயங்கும் படகு, படகு இல்லம், வாட்ரோ மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அயோத்தி 2.0
அயோத்தியில் ரூ.2200 கோடியில் துணை நகரம் அமைய உள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றி உள்ள ராமா் பாதை, பக்தி பாதை, தா்ம பாதை, ஸ்ரீராம ஜென்மபூமி பாதை மேம்படுத்தப்படும். 25,000 பக்தா்கள் தங்கும் அளவுக்கு கூடார நகரம் அமைக்கப்படும். நட்சத்திர ஓட்டல், வணிக வளாகங்கள் திறக்கப்பட இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
அழகிய மெழுகுச்சிலை
10 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.7 கோடி செலவில் ராமாயண மெழுகுச்சிலை அருங்காட்சியகம் அமைய உள்ளது. சீதை சுயம்வரம், ராமர் வனவாசம், அனுமன் உள்ளிட்ட 80 கதாபாத்திரங்களின் மெழுகுச் சிலைகள் நிறுவப்பட உள்ளன.
1266
ராமர் கோயிலுக்கு ஆக.5, 2020 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1266 நாளில் (3 ஆண்டு, 5 மாதம், 18 நாள்) முதல் கட்ட பணிகள் முடிந்தன. ஜன. 22, 2024ல் தரைத்தளம் திறக்கப்படுகிறது. 2025ல் பணிகள் முழுமை பெறும்.
எதையும் தாங்கும்
* ராமர் கோயில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும்.
* கருவறையின் உயரம் 20 அடி.
* கருவறைக்கு தங்கக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.
* கோயிலின் மொத்த உயரம் 161 அடி.
* நீளம் 380 அடி, அகலம் 250 அடி.
* 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
ஐந்து மண்டபம்
நடன மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் உட்பட ஐந்து மண்டபங்கள் உள்ளன.
மூன்று தளம்
ராமர் கோயில் மூன்று தளம் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. கீழ் தளத்தில் 160, முதல் தளத்தில் 132, இரண்டாவது தளத்தில் 74 அறைகள் உள்ளன.
108
திறப்பு விழாவுக்கு வதோதராவில் தயாரான 108 அடி நீள அகர்பத்தி கொண்டு வரப்படுகிறது.
392
கோயிலில் சிற்பங்களால் ஆன 392 துாண்கள் அமைய உள்ளன. தரைத்தளத்தின் 160 துாண்களில் ஆறு மட்டும் நாக்பூர் வெள்ளை மக்ரானா மார்பிள் வகையைச் சேர்ந்தவை. மற்றவை ராஜஸ்தான் பான்சி பஹர்பூரின் இளஞ்சிகப்பு நிற கற்களால் ஆனவை.
1,17,612
ராமர் கோயில் 1,17,612 சதுர அடியில் (2.7 ஏக்கர்) கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் சுற்று வட்டார பகுதி 25,00,244 சதுர அடி (57.4 ஏக்கர்) பரப்பு கொண்டது.
200 மடங்கு அதிகம்.
அயோத்தியில் உள்ள ஓட்டல் அறைகள் வரும் 2024 பிப்ரவரி வரை முன் பதிவு செய்யப்பட்டு விட்டன. வாடகை சாதாரண நாளை விட 200 மடங்கு அதிகம்.
சாகேத்
இந்தியாவின் பழங்கால நகரம் அயோத்தி. இதன் மற்றொரு பெயர் சாகேத். இது கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.
சம்தா ஏரி
அயோத்தியில் சரயு நதி பாய்கிறது. இங்குள்ள சம்தா ஏரி 60 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
14 தங்கக் கதவுகள்
* கோயிலை சுற்றி செவ்வக வடிவில் உள்ள சுற்றுச்சுவரின் நீளம் 2402 அடி. அகலம் 14 அடி.
* சுற்றுச்சுவரின் நான்கு மூலைகளிலும் சூரியபகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவன் கோயில் அமைகின்றன.
* தங்க முலாம் பூசிய 14 கதவுகள் உட்பட 44 கதவுகள் உள்ளன. இதற்கான மரப்பலகைகள் மஹாராஷ்டிராவின் பாலர்ஷா, ஆலப்பள்ளி(…………..) வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.
* கோயிலின் இடதுபக்கம் புராண காலத்தைச் சேர்ந்த ‘சீதா கிணறு’ உள்ளது. இதுபோல ராம ஜென்ம பூமி வளாகத்தில் ராமாயண காலத்தில் இருந்த 11 புராண, வரலாற்று பகுதிகளை கண்டறிந்து பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர்.
* துாண்கள், சுவர்களில் பல்வேறு கடவுளர், துறவியரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
* கோயில் வளாகத்தில் ஏ.டி.எம்., வசதி, வங்கிகள், அவசரகால மருத்துவ வசதி, தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மின்சார நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
* கோயிலின் மற்ற பகுதிகள் ‘பிங்’ நிற கற்களில் கட்டப்பட்டாலும், நுழைவாயில், கருவறை முழுவதும் வெள்ளை நிற மார்பிளால் ஆனது.
* ‘இன்டர்லாக்கிங் சிஸ்டம்’, காப்பர் வயர் மூலம் கற்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒட்டுவதற்கு வெள்ளை சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது.
* 4000 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* இந்தியாவில் உள்ள 1500 கோயில்களை ஆய்வு செய்து சிறந்த கட்டுமான மாடல் தேர்வு செய்யப்பட்டது.
* கோபுரத்தின் உச்சியில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு துாணிலும் 16 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் மட்டும் 4000 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2, 3ம் தளங்கள் 2024 டிசம்பரில் நிறைவடையும்.
* டில்லி, சென்னை, கவுஹாத்தி ஐ.ஐ.டி., சூரத் என்.ஐ.டி., ரூர்க்கியின் மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்தின் தேசிய புவி ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூருவின் தேசிய ராக் மெக்கானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.
மின்சாரக் கார் வசதி
* சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் வி.வி.ஐ.பி., விருந்தினர்களை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் செல்ல 12 மின்சாரக் கார் வசதி செய்யப்பட்டுள்ளன.
* கும்பாபிஷேகம் முடிந்த பின் அயோத்திக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கிய பின்னர் மின்சாரக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 10 கி.மீ.,க்கு ரூ. 250, 20கி.மீ.,க்கு ரூ.400, 12 மணி நேரத்துக்கு ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* அயோத்தி ரயில், விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீராமர் கோயிலுக்கும், அயோத்தியின் பிற சுற்றுலா இடங்களுக்கும் இக்கார்களை பயன்படுத்தலாம்.
* அலைபேசி, செயலி வாயிலாக இந்த மின்சாரக் கார்களை புக்கிங் செய்யலாம்.
அயோத்தி செல்வது எப்படி
* மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து டில்லிக்கு விமான சேவை உள்ளது. டில்லியில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் (பயண நேரம் 1 மணி 20 நிமிடம்) செல்லலாம். குறைந்தபட்ச கட்டணம் ரூ.3600
* ராமேஸ்வரத்தில் (தற்போது ராமநாதபுரம்) இருந்து திங்கள்தோறும் சென்னை வழியாக அயோத்தி நேரடி ரயில் சேவை உள்ளது.
புறப்படும் நேரம் : திங்கள் நள்ளிரவு 12:50 மணி – சேரும் நேரம் : புதன் அதிகாலை 3:53
* டில்லியில் இருந்தும் அயோத்திக்கு ரயில் சேவை உள்ளது.
* சென்னை – அயோத்திக்கு காரில் 36 மணி நேரத்தில் (துாரம் 1929 கி.மீ.) செல்லலாம்.
* ஜன. 22, 2024ல் கும்பாபிஷேகம் முடிந்த பின் நாட்டின் 500 இடங்களில் இருந்து அயோத்திக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1266
ராமர் கோயிலுக்கு ஆக.5, 2020 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 1266 நாளில் (3 ஆண்டு, 5 மாதம், 18 நாள்) முதல் கட்ட பணிகள் முடிந்தன. ஜன. 22, 2024ல் தரைத்தளம் திறக்கப்படுகிறது. 2025ல் பணிகள் முழுமை பெறும்.
![]() |
உயிர் காத்த உத்தமன்
ராவணனுடன் நடந்த போரில், ராம, லட்சுமணருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவி மலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமன்.
ராமனுடன் நட்பு கொள்ள ராவணனின் தம்பி விபீஷணன் வந்த போது, ‘ராவணன் செய்யும் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவு பார்க்க வந்திருக்கலாம்’ என சுக்ரீவனும் வானரர்களும் தெரிவித்தனர். ‘நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே என் பணி’ என ராமர் தர்மத்தைக் காப்பாற்ற முயன்றார்.
ஒருவேளை விபீஷணனை ஏற்காவிட்டால், தர்மம் அழிந்து விடும். இந்நிலையில் ராமனின் கருத்தை அனுமன் ஆமோதிக்கவே, விபீஷணனை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் ராமர்.
ராமனின் உயிர் மூச்சான தர்மத்தை காப்பாற்றியவர் அனுமன். காரணம் அவர் வாயுவின் மகன் அல்லவா!
யாருக்கும் கிடைக்காத பாக்கியம்
பட்டாபிஷேகத்திற்கு முதல் நாள் அயோத்தியிலுள்ள ரங்கநாதரை தரிசிக்க ராமனும், சீதையும் சென்றனர். அதாவது தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன். ‘அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே’ என்ற அபூர்வ நிலை. மனிதனாக பிறந்ததால் இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான்.
யாருக்கும் கிடைக்காத அந்த பாக்கியம் கிடைத்தாக எண்ணிய சீதை இமை கொட்டாமல் விரிந்த கண்களுடன் பார்த்தாள். இதன் காரணமாக சீதையை ‘விசாலாக்ஷ்யா’ (அகன்ற கண்களை உடையவள்) என அழைக்கிறார் வால்மீகி முனிவர்.
நீங்க ராமனா? ராவணனா?
பெயருக்கும் குணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதற்கு ஒரு சான்று… ‘ராமன்’ என்ற சொல்லுக்கு ரம்மியமானவன், ஆனந்தப்பட செய்பவன் என பொருள்.
‘ராவணன்’ என்ற சொல்லுக்கு, ‘பிறரை சிரமப்படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக் கூடியவன்’ என பொருள்.
ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்தவிதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி கொழுந்து விட்டெரியுமே… அப்படி இருந்ததாம்.
அனுமன் இலங்கையை துவம்சம் செய்வதை கேள்விப்பட்டு, ராவணன் எழுந்தவிதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம்.
எனவே இனி குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது, பெயருக்கான பொருளைத் தெரிந்து கொண்டு வையுங்கள்.
ராமனை கோபப்படுத்தாதீர்கள்
சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட இரக்கம் கொண்டு, ‘இன்று போய் நாளை வா’ என்றவரையே கோபத்திற்கு உள்ளாக்கினார் ஜாபாலி ரிஷி.
”ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? அப்படி போனதை யாரும் பார்த்ததுண்டா? மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது…” என்றார் ஜாபாலி ரிஷி.
இதைக் கேட்டதும் ராமனின் கண்கள் சிவந்தன.
”மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திரத்திற்கு விரோதமாக பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம்” என கோபித்தார்.
ஜாபாலி ரிஷி நடுங்கி விட்டார்.
”அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால் உன் வாயால் இந்த வார்த்தைகள் தெளிவாக வரட்டுமே என்று தான் கோபமூட்டினேன்.” என்ற பின்னரே ராமன் சமாதானம் அடைந்தார்.
தம்பி ‘கேவட்’
வனவாசம் சென்ற ராம லட்சுமணர் கங்கை கரைக்குச் சென்றனர். அங்கு நின்ற ஓடக்காரன் ‘கேவட்’ முகமலர்ச்சியுடன் வரவேற்றான். ராமாயணத்தில் கேள்விப்படாத பாத்திரமாக இருக்கிறதே என வியக்கிறீர்களா? இந்த கேவட் தான் கம்ப ராமயணத்தில் ‘குகன்’ என அழைக்கப்படுகிறான். ஹிந்தியில் துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தில் இவனுக்கு ‘கேவட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தை கொடுத்தாள். இதை கண்ட கேவட், “சுவாமி! ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் நாம் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது” என மறுத்தான். அவனது அன்பை கண்ட ராமர், “உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகளாகி விட்டோம்” என்றார்.
சத்தியத்தை மீறாதவர்
ராவணனால் அல்லல்படுகிறோம் என தேவர்கள் அனைவரும் திருமாலிடம் முறையிட்டனர்.
”தேவர்களே! நான் பூமியில் ராமனாகப் பிறந்து பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழிப்பேன். கவலை வேண்டாம்” என்றார். சொன்னபடியே வாக்குறுதியை நிறைவேற்றினார். அவர் வாழ்நாளின் கடைசி நாள் வந்தது. அயோத்தி அரண்மனைக்கு வந்து ராமனைச் சந்தித்தான் எமதர்மன்.
”ஐயனே! இன்றோடு தங்கள் ஆயுள் முடிகிறது. வானுலகம் கிளம்பலாமா?” என்றான்.
மறு பேச்சில்லாமல் கிளம்பினார் உத்தம புருஷரான ராமர்.
ராமன் நினைத்திருந்தால் தன் ஆயுளை எவ்வளவு காலத்திற்கும் நீட்டியிருக்கலாம். ஆனால் அவர் சத்தியத்தை காப்பாற்றினார். சத்தியம் சத்தியத்தை காப்பாற்றுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
உடனடி பலனுக்கு…
மறைந்திருந்து வாலி மீது அம்பு எய்தார் ராமர். அம்பு பாய்ந்ததால் கீழே விழுந்த அவன் ராமரை கண்டு பிரம்மித்துப் போனான். ‘சக்கரவர்த்தி திருமகனே! நீயா இப்படிச் செய்தது? உன்னிடமா இரக்கம் இல்லை? என் மீது அப்படி என்ன குற்றம் கண்டாய்? சீதைக்கு துன்பம் இழைத்த காகாசுரனுக்குக் கூட வாழ்வு அளித்தாயே. ஆனால் எனக்கு மரணத்தை தந்து விட்டாயே… ஏன்? புரிகிறது… தாயாக விளங்கும் சீதையை பிரிந்ததால் உன் மனதில் ஈரம் இல்லாமல் போனதோ…’ என புலம்பியபடி உயிர் நீத்தான் வாலி.
ராமனிடம் வைக்கும் எந்த கோரிக்கையையும் தாயான சீதையிடம் கேட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.
ராமருடைய தொடர்புள்ள தமிழக தலங்கள்
புள்ளம்பூதங்குடி
சுவாமிமலை – திருவையாறு வழியில் 4 கி.மீ., தொலைவில் உள்ளது புள்ளம்பூதங்குடி. ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு தடுக்க முயன்றது. வாளால் அதன் இறகை ராவணன் வெட்டினான். அவ்வழியாக வந்த ராம, லட்சுமணரிடம் ஜடாயு நடந்ததை சொல்லி உயிர் நீத்தது. ஜடாயுவுக்கு இறுதிக்கடனை ராமர் இத்தலத்தில் செய்தார்.
செதிலபதி
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பூந்தோட்டம் அருகிலுள்ளது செதிலபதி. இங்கு ராமர் தனது தந்தை தசரதருக்கும், ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்தார். தர்ப்பணத்தின் போது பிண்டம் பிடிக்கும் சடங்கு நடக்கும். ராமர் பிடித்த பிண்டங்கள் சிவலிங்கங்களாக மாறின. முன்பு திலதர்ப்பணபுரி என இருந்தது. தற்போது செதிலபதி எனப்படுகிறது.
ராமர் பாதம்
வேதாரண்யம் – கோடியக்கரை சாலையில் 3கி.மீ., தொலைவில் உள்ளது ராமர் பாதம். சீதையை மீட்பதற்காக ராமன் வேதாரண்யம் வந்தார். இங்குள்ள மணல் மேட்டில் (25 அடி) இருந்து பார்த்த போது ராவணனின் கோட்டையின் பின்புறம் தெரிந்தது. பின்புறமாகச் சென்று தாக்குவது வீரனுக்கு அழகல்ல என்பதால் பின்னர் ராமேஸ்வரம் சென்றார். ராமர் கால் பதித்த மண் மேடே ராமர் பாதம் எனப்படுகிறது.
கோதண்ட ராமர் கோயில்:
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., துாரத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது. ராமனிடம் சரணடைவதற்காக ராவணனின் சகோதரனான விபீஷணன் ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்ற ராமர், இலங்கையை வெற்றி பெறும் முன்பே அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த தலம் இது.
கந்த மாதன பர்வதம்
ராமேஸ்வரத்தில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் கந்த மாதன பர்வதம் உள்ளது. இங்குள்ள மணல் குன்றே ராமேஸ்வரத்தின் உயரமான பகுதி. சீதையை தேடி வந்த ராமர் இக்குன்றின் மீது நின்று இலங்கையை நோக்கினார். இங்குள்ள இரண்டடுக்கு மண்டபத்தில் ராமர் பாதம் உள்ளது.
திருப்புல்லாணி
ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ. துாரத்தில் உள்ளது திருப்புல்லாணி. கடலில் பாலம் அமைப்பதற்காக கடல் அரசனான வருணதேவனிடம் அனுமதி பெற ராமர் இங்கு மூன்று நாள் இருந்தார். அப்போது ராமர் தலையணையாக புல்லை வைத்து படுத்து இருந்ததால் இது திருப்புல்லணை எனப்பட்டது. தற்போது திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது.
தேவிபட்டினம்
ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் தேவிபட்டினம் உள்ளது. சீதையை ராவணன் துாக்கிச் செல்ல நவக்கிரக தோஷமே காரணம் என்றும், அதனை போக்க நவக்கிரக வழிபாடு செய்ய வேண்டும் என அசரீரி கேட்டது. ராமரும் இலங்கை செல்ல பாலம் அமைக்கும் முன் நவபாஷாணத்தால் ஆன நவக்கிரகங்களை கடலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்போது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பை தன் வலதுகையை உயர்த்தி அடக்கினார். இதனால் ‘கடல் அடைத்தப் பெருமாள்’ என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
ஏகாந்த ராமர்
பாம்பன் அருகிலுள்ள தங்கச்சிமடத்தில் ராமர் கோயில் உள்ளது. இங்கு தனியாக அமர்ந்து சீதையைப் பற்றி ராமர் சிந்தித்தார். இதனால் இவர் ஏகாந்தராமர் என அழைக்கப்படுகிறார்.
சேதுக்கரை
திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் உள்ளது சேதுக்கரை. ராமன் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். சேது என்றால் அணை. அணை கட்டிய இடத்திலுள்ள கரை என்பதால் இதனை சேதுக்கரை என்கின்றனர். இங்கு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இவர் இலங்கையை பார்த்தபடி உள்ளார்.
தனுஷ்கோடி:
தனுஷ் என்பது வில். கோடி என்பது முனை. இந்தியப் பெருங்கடலும் வங்கக் கடலும் சேரும் இத்தலத்தில் நீராடுவது புனிதமானதாகும்.
ராமேஸ்வரம்:
ராவணனைக் கொன்ற பாவம் தீர சிவ பூஜை செய்ய விரும்பினார் ராமர். அதற்காக சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமனை காசிக்கு அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, கடற்கரை மணலில் சிவலிங்கம் அமைத்தாள் சீதை. இதையே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி என அழைக்கிறோம்.
உப்பூர்
ராமநாதபுரத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உப்பூர் உள்ளது. இலங்கைக்கு செல்லும் முன் ராமர் இங்குள்ள வெயிலுகந்த விநாயகரை வழிபட்டார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மீ, தொலைவில் வேதாரண்யம் உள்ளது. ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கு கடலில் நீராடினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்