குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை பயன்படுத்துவது குறித்த அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
உரிய மரியாதை
இதுகுறித்து நேற்று டில்லியில் மத்திய அரசு அமைச்சகங்கள், மாநில தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட அரசு நிர்வாக அமைப்புகள் அனைத்துக்கும், உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் பாண்டே பிரதீப் குமார் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்திய மக்கள் ஒவ்வொருவரது, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள தேசிய கொடிக்கு, உரிய மரியாதை அளித்தல் அவசியம்.
இருப்பினும், பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு தரப்பு நிறுவனங்கள் அலுவலகங்கள் போன்றவற்றில், இதுகுறித்த போதிய புரிதல் இல்லாத நிலையும் காணப்படுகிறது.
தேசிய கொடியை பயன்படுத்துவதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளன.
கொடியை எவ்வாறு ஏற்றுவது, எவ்வாறு பறக்கவிடுவது உள்ளிட்ட ஒவ்வொரு விஷயம் குறித்த பயன்பாட்டு விதிமுறைகளும் அச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இணையதளம்
உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இதுகுறித்து இடம்பெற்றுள்ள அனைத்து விபரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், அரசு நிகழ்ச்சிகளின்போது காகிதத்தில் செய்யப்பட்டுள்ள தேசிய கொடிகளை பலரும் கைகளில் பிடித்து ஆட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அதன்பின், அந்த கொடிகள் கசங்கிய நிலையிலும், கிழிக்கப்பட்ட நிலையிலும் சாலைகளில் கிடப்பதையும் காண முடிகிறது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்துதல் அவசியம்.
இதுகுறித்து பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்களில் விரிவான விளம்பரங்கள் செய்து, மக்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
— நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்