ரஜினியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் ஆகத் திகழ்ந்த படம் `ஜெயிலர்’. விஜய்யின் `பீஸ்ட்’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.635 கோடி வசூலை எட்டியதாகச் சொல்கிறார்கள். இப்படி அதிரிபுதி வெற்றியைக் கொடுத்த ரஜினி – நெல்சன் கூட்டணி மீண்டும் இணையும் படம்தான் `ஜெயிலர் 2′. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும் நிச்சயம் ஜெயிலருக்கு இரண்டாம் பாகம் உண்டு என்கிறார்கள். இந்நிலையில் `ஜெயிலர் 2’வில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் எனத் தகவல்கள் பரவியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, சுனில் என மல்டி ஸ்டார்களின் கூட்டணி வியக்க வைத்தது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மேடையில் ரஜினி கூட, ‘காக்கா – கழுகு’ கதையைச் சொல்லி, சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விவாதத்தைக் கிளம்பினார். இதையெல்லாம் தாண்டி, படத்தின் விறுவிறுப்பும், இசையும் படத்தை வேறு கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதில் ரூ.600 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. இதனால், ரஜினியே ‘ஜெயிலர் 2’ படத்தை உருவாக்க விரும்பினார். இது குறித்து நெல்சனிடம் பேசவும், உற்சாகமானார் நெல்சன். இதனையும் சன் பிக்சர்ஸே தயாரிக்க விரும்பியதில், மீண்டும் இணையவிருக்கிறது ‘ஜெயிலர்’ கூட்டணி!
இப்போது `ஜெயிலர் 2’வில் நயன்தாராவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது என்றும், படத்தில் கௌரவத் தோற்றத்தில் விஜய் நடிப்பார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து விசாரித்தால்…

“ரஜினி இப்போது த.செ.ஞானவேலின் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அதனை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜின் படத்திற்குச் செல்கிறார். இது ரஜினியின் 171வது படமாகும். லோகேஷ் இப்போது ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கிவிட்டார். இதுவும் மல்டி ஸ்டார் படம் என்றும், ‘லியோ’வில் காஷ்மீர் கதைக்களம் என்பது போல, இதிலும் ஒரு ஸ்பெஷலான கதைக்களம் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தனது 171வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் ரஜினி 172வது படத்துக்குள் செல்வார். அது நெல்சன் படமாகவும் இருக்கக் கூடும் என்கிறார்கள். அதே சமயம் நெல்சன் ‘ஜெயிலர் 2’க்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்போதைக்கு இந்தப் புதிய படத்தில் அனிருத் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறார். மற்றபடி படத்தின் ஸ்டார் காஸ்ட் எதுவும் முடிவாகவில்லை. கதை விவாதம்தான் தீவிரமாக நடந்து வருகிறது. முழுக்கதையும் ரெடியான பிறகே, கதைக்கான ஆட்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் நெல்சன். அதே சமயம், நாம் நினைத்தே பார்த்திராத மல்டி ஸ்டார்களும் இந்தப் படத்தில் இணையலாம்!” என்கிறார்கள்.
`ஜெயிலர் 2′ வந்தால் அதில் யாரெல்லாம் நடிக்கலாம் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.