அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வரும் மார்ச் 10ம் தேதி 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதற்கான இறுதிக்கட்ட பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ‘Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்தியாவிலிருந்து இந்த முறை எந்தப் படைப்பும் இறுதிக் கட்டத்துக்குத் தேர்வாகவில்லை.

அதே சமயம், இந்தியாவின் ஜார்கண்ட்டில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கனடா நாட்டின் ‘To Kill a Tiger’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இயக்குநர் நிஷா பஹுஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜார்கண்ட்டைச் சேர்ந்த சாதாரண விவசாயியின் 13 வயது மகள் கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகிறார்கள். இந்தச் சூழலிலும் அஞ்சாமல் தனது 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடுகிறார் தந்தை ரஞ்சித்.

மனதை உலுக்கும் இந்த ஆவணப்படம் கனடாவில் நடைபெற்ற ‘Toronto International Film Festival’ மற்றும் ‘Lighthouse International Film Festival’ விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், பல விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் தற்போது இந்த 96வது ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.