மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்நிலையில், 65 உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11 மணி அளவில் உக்ரைன் எல்லையோர நகரமான ரஷ்யாவின் பெல்க்ரோட் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 65 போர்க் கைதிகளுடன் விமானத்தில் 6 பணியாளர்கள், 3 துணை ராணுவ வீரர்கள் பயணித்துள்ளதாக தெரிகிறது.
இந்த Ilyushin Il-76 விமானம் என்பது துருப்புகள், சரக்குகள், ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ராணுவ போக்குவரத்து விமானம் எனக் கூறப்படுகிறது. அதாவது, கைதிகள் பரிமாற்றத்துக்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விமானத்தில் பயணித்த 65 போர்க் கைதிகள் உள்பட 74 பேரும் உயிரிழந்ததாக பெல்க்ரோட் மாகாண ஆளுநர் Vyacheslav Gladkov தெரிவித்து உள்ளார். பெல்கோரோட்டின் கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸார் விரைந்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானபோது எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும், வலது இறக்கையில் முதலில் தீப்பற்றியது. இதையடுத்து, விமானம் முழுவதும் தீ பற்றி எரிகிறது.
போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், விபத்து குறித்து தன்னிடம் போதுமான தகவல்கள் இல்லாததால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
Russian military jet with 65 Ukrainian Prisoners of War on board crashes in #Belgorod region.#Russia #UkraineWar #planecrashpic.twitter.com/wMACnGOnbm
— Annu Kaushik (@AnnuKaushik253) January 24, 2024