மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் 65 கைதிகள் உட்பட 74 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் நேற்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த அனைவரும் இறந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கி உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் போர் கைதிகள் 65 பேர் உட்பட 74 நபர்களுடன் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் நேற்று காலை புறப்பட்டது.
இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள பெல்க்ரோட் பகுதியை கடந்த போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், கீழே விழுந்து வெடித்து சிதறியது.
தகவலறிந்த ரஷ்ய ராணுவத்தின் சிறப்பு குழு, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துஉள்ளது. கைதிகள் பரிமாற்றத்திற்காக 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிச் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளானதாக கூறப்படும் விமானத்தை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தி உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்தாக்குதல் சம்பவத்தை, பயங்கரவாத செயல் எனவும் ரஷ்ய அரசு விமர்சித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement