புதுடில்லி,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கு சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து தொடர்பான வழக்கில், ‘1981ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என, தற்போதுள்ள அரசால் எப்படி கூற முடியும்’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் அமைந்துள்ளது அலிகர் முஸ்லிம் பல்கலை. மத்திய பல்கலையான இதற்கு, சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து வழங்குவது தொடர்பான சர்ச்சை நீண்டகாலமாக உள்ளது.
ஏழு நீதிபதிகள்
இது தொடர்பான வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, 1967ல் தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய பல்கலையாக இருப்பதால், சிறுபான்மையினர் அந்தஸ்தை கோர முடியாது என, கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கு, சிறுபான்மையினர் கல்வி அந்தஸ்து அளித்து, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், 1981ல் பார்லிமென்டில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத் திருத்தம் செல்லாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2006ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல்கலை சார்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, ஏற்கனவே தாக்கல் செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெறுவதாக, 2016ல் அறிவித்தது.
இது தொடர்பான வழக்குகளை, ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் மாற்றியது. இதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
இந்தப் பல்கலைக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து அளித்து பார்லிமென்டில் செய்யப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டத் திருத்தம்
அதனால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கே வரவில்லை. அதன்படி பார்க்கும்போது, இந்தப் பல்கலைக்கு சிறுபான்மையினர் கல்வி நிறுவன அந்தஸ்து கிடையாது. இதுதான் தற்போதுள்ள மத்திய அரசின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:
கடந்த 1981ல் சிறுபான்மையினர் அந்தஸ்து அளித்து பார்லிமென்டில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அரசுகள் மாறலாம்; ஆனால் பார்லிமென்ட் மாறாது.
பார்லிமென்ட் மிகவும் உயர்ந்தது. அது அழிவில்லாதது.
வேறு கட்சியின் ஆட்சியின்போது சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அது பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. அதனால், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதை ஏற்க முடியாது என, தற்போதுள்ள அரசால் எப்படி கூற முடியும்?
இது போன்ற வாதத்தை நீதிமன்றத்தில் எப்படி அரசால் வைக்க முடியும்? வேண்டுமானால், அந்த சட்டத் திருத்தத்தை மாற்றி, பார்லிமென்டில் புதிய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளலாம்.
ஆனால், முந்தைய பார்லிமென்ட் செய்த சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என, நீதிமன்றத்தில் எப்படி வாதிடலாம்?
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை, 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்