`இந்த தடுப்பூசி 100% புற்றுநோய் வராமல் தடுத்துள்ளது' – ஸ்காட்லாந்து அரசின் சிறப்பான திட்டம்!

ஸ்காட்லாந்து நாட்டில் 25 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களில் பலருக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும், ஸ்காட்லாந்தில் வசிக்கும் பெண்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தடுப்பதற்காக ஸ்காட்லாந்து அரசு ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma Virus-HPV) நோய்த்தடுப்புத் திட்டம் என்ற திட்டத்தை 2008-ம் ஆண்டு துவங்கியது.

Cancer awareness

ஹியூமன் பாபிலோமா என்ற வைரஸ் தொற்றின் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் புற்றுநோய் பாதிக்கும். இந்தப் புற்றுநோயானது கருப்பை திசுக்களை பாதிப்பதோடு நுரையீரல், கல்லீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உடலின் பிற பகுதிகளுக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸானது பாலியல் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது, பல பார்ட்னர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவற்றாலும் பரவும்.

இந்த வைரஸில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த வைரஸின் 16 மற்றும் 18-வது மரபணு வகை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டது. இந்நோய் பாதித்தவர்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்படும். நோய் தீவிரமாகும் பட்சத்தில் புற்றுநோய் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Vaccine

இந்நிலையில் ஸ்காட்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்படி, அந்நாட்டிலுள்ள பெண் குழந்தைகளுக்கு 12 வயதுக்கு முன்பாகவே HPV தடுப்பூசி செலுத்தினர். தடுப்பூசி செலுத்துவதால் HPV வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். திட்டம் தொடங்கி பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு அரசு, எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகம் ஆகியற்றுடன் இணைந்து இது தொடர்பான ஆய்வை நடத்தி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “12 வயதில் முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, பின் தொடர்ச்சியாக முழு டோஸையும் எடுத்துக்கொண்ட பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் இதுவரை கர்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நோய்க்கிருமியும் கண்டறியப்படவில்லை. HPV தடுப்பூசி புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் வளர்ச்சியைத் தடுப்பதில் 100% செயல்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cervical Cancer

இதுகுறித்து பேசிய ஸ்காட்லாந்து பொது சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் கிளாரி கேமரூன், “HPV தடுப்பூசி தொடர்ந்து போடுவதன் மூலமும், பாதிப்பு குறித்த பரிசோதனையை ஊக்குவித்தல் மூலமும் நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முழுமையாக அகற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.