காதலர் யார்? : விரைவில் அறிவிக்க உள்ளார் கங்கனா

தமிழில் 'தலைவி, சந்திரமுகி 2' படங்களின் மூலம் இன்றைய சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவரைத்தான் கங்கனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் வதந்தியும் கிளம்பியது.

இந்நிலையில் அதற்கு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கங்கனா. “தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என மீடியாவிற்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். நிஷாந்த் பிட்டி ஜி மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கையை நடத்தி வருபவர். நான் வேறொருவரைக் காதலிக்கிறேன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் வெளியிடுவேன். தயவு செய்து எங்களை சங்கடப்படுத்த வேண்டாம். ஒரு இளம் பெண் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு இடையே தொடர்பு உள்ளது என்று சொல்வது சரியல்ல. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பையில் ஒரு சலூனில் ஒருவருடன் கங்கனா கை பிடித்து நடந்து வந்த புகைப்படம் வெளியானது. அவர்தான் கங்கனாவின் காதலர் என்று செய்திகள் வெளியாகி, சர்ச்சையாகின. ஆனால், அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் என சொல்லி சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

தற்போது கங்கனாவே அவருடைய காதலைப் பற்றி சொல்லியிருப்பதால் அவரது காதலர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள பாலிவுட் மீடியாக்கள் வலை வீசிக் கொண்டிருப்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.