சித்ரதுர்கா : “பொது பொறுப்பு நிதியை பயன்படுத்தி, மாநிலம் முழுதும் 500 பள்ளிகள், கர்நாடக பப்ளிக் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்,” என, தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தில் துவங்கப்பட்ட, 300 கர்நாடக பப்ளிக் பள்ளிகள், மிகவும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு நல்ல மவுசு உள்ளது. சிறார்கள் கன்னடம் மற்றும் ஆங்கில வழிக்கல்வி பெறுவதே, இதற்கு காரணம்.
கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை முற்றிலும் இலவசமாக கல்வி பெற்று, வெளியே வருகின்றனர்.
வரும் கல்வியாண்டு முதல், கர்நாடக பப்ளிக் பள்ளிகளில், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.யில் இருந்தே, கல்வி அளிக்கப்படும். இதனால் சிறார்களுக்கு தடையின்றி கல்வி கிடைக்கும்.
தொகுதி எம்.எல்.ஏ.க்களின் கருத்து சேகரித்து, தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் தேர்வு செய்யப்படும். பொது பொறுப்பு நிதியை பயன்படுத்தி, கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
ஆய்வகம், தொழிற்கல்வி, கழிப்பறை உட்பட, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து, தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு, கர்நாடக பப்ளிக் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
இந்த பள்ளிகளில், உடற்பயிற்சி ஆசிரியர், ஓவியக்கலை, சங்கீத ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர்களும் இருப்பர். இதற்கு தகுந்தார் போன்று, மாணவர் எண்ணிக்கை இருப்பதும் அவசியம். அதிக மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளே, தரம் உயர்த்த தேர்வு செய்யப்படும்.
வரும் ஐந்து ஆண்டுகளில், 3,000 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்க, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலத்தில் 6,000 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தலா இரண்டு கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒன்று வீதம், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படும். இந்த இலக்கை வெற்றிகரமாக எட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்