பெலகாவி, : பெலகாவி பெண்ணை நிர்வாணப்படுத்திய வழக்கில், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசார் தயாராகி வருகின்றனர்.
பெலகாவி வந்தமூரி கிராமத்தைச் சேர்ந்தவர் துண்டப்பா நாயக், 25, இவரது எதிர்வீட்டில் வசித்தவர் பிரியங்கா, 23. ஒரே ஜாதியை சேர்ந்த இருவரும் காதலித்தனர். காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் 9ம் தேதி, இருவரும் வீட்டைவிட்டு ஓடி, திருமணம் செய்து கொண்டனர்.
இதுபற்றி அறிந்த பிரியங்காவின் பெற்றோர், கடந்த மாதம் 10ம் தேதி, துண்டப்பா வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர். அவரின் தாயைத் தாக்கி சாலையில் தரதரவென இழுத்து வந்தனர். நிர்வாணமாக்கி மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கினர்.
இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேசிய மகளிர் ஆணையம், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தன. இதன்பின்னர் இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது. கடந்த 19ம் தேதி வழக்கு விசாரணையின்போது, இந்த மாத இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று, அரசு வக்கீல் கூறி இருந்தார்.
அதன்படி குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில், சி.ஐ.டி., போலீசார் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். பிரியங்கா உட்பட 40 பேரின் சாட்சியம் சேகரிக்கப்பட்டு உள்ளது.
குற்றப்பத்திரிகை 1,500 பக்கங்கள் கொண்டதாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகையை, நீதிமன்றத்தில் தாக்கல் போலீசார் தயாராகி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement