வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டேராடூன்: மூட நம்பிக்கை மற்றும் அதிசயம் நடக்கும் என்ற நப்பாசையில் பெற்றோரின் செயல் காரணமாக 5 வயது சிறுவன் உயிர் பறி போன கொடூரம் உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
டில்லியில் பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுவன், ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளான். மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். ஆனால், சிறுவன் வாழ்வது கடினம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, கங்கையில் நீராடினால் புற்றுநோய் குணமாகும் என பெற்றோர் நம்பி உள்ளனர். இதனையடுத்து பெற்றோர், சிறுவன் மற்றும் உறவுப்பெண் ஒருவர் என 3 பேர் நேற்று, கார் மூலம் டேராடூன் சென்றுள்ளனர். காரில் பயணிக்கும் போதே சிறுவன் மிரட்சியுடன் காணப்பட்டதாக டிரைவர் கூறினார். விசாரித்ததில், ரத்த புற்றுநோய் காரணமாக அப்படி காணப்படுவதாக பெற்றோர் கூறியதாக விளக்கமளித்தார்.
டேராடூன் வந்ததும், கங்கை நதியில் சிறுவனை உறவுப்பெண் மூழ்க வைத்துள்ளார். பெற்றோர் கரையில் நின்று பிரார்த்தனை செய்தனர். அங்கிருந்தவர்கள் இதனை பார்த்துள்ளனர். சிறுவன் நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவே இதனை நிறுத்தும்படி சிலர் சைகை மூலம் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோரும், உறவுப்பெண்ணும் அதனை கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்தவர்கள், வலுக்கட்டாயமாக அவர்களை தடுத்து சிறுவனை தூக்கினர். ஆனால் அவர்களை உறவுப்பெண் தாக்கி உள்ளார்.
இருப்பினும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்,அந்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இருப்பினும், அச்சிறுவன் உடல் அருகே அமர்ந்திருந்த உறவுப்பெண், சிறுவன் கண்டிப்பாக உயிர் பிழைத்துவிடுவான் என நீண்ட நேரம் கூறிக் கொண்டு இருந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement