‘அபெக்ஸ் மேட்ச் கன்சோர்ட்டியம்’ என்கிற பெயரில் தீப்பெட்டி உற்பத்தி செய்து வரும் சரண்யன்:
என் சொந்த ஊர் சிவகாசி. எங்கள் குடும்பத்தில், தீப்பெட்டி வியாபாரத்துக்கு முன்னோடியாக திகழ்ந்தவர், என் அப்பா.
செல்வம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் உயர்த்த வேண்டும் என என்னை சிந்திக்க வைத்தது, அவரின் தொலைநோக்குப் பார்வை. பட்டப்படிப்பை முடித்த பின், அப்பா நடத்தும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் சேர்ந்தேன்.
தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போது, சக தொழிலதிபர்களுடன் பழகி, நேர்மறையான உறவுகளை வளர்த்துக் கொண்டேன்.
நானும், என் பார்ட்னர் சஜீவ் மற்றும் ஆறு தொழில் முனைவோர்கள் இணைந்து செயல்பட முடிவு செய்தோம்.
தீப்பெட்டிக்கான ஆர்டர்களை உலகம் முழுக்க சென்று வாங்கி வருவது, வந்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு செய்வது, தனிப்பட்ட முறையில் லாபம் அடைய நினைக்காமல், ஒவ்வொருவருக்கும் எந்த வேலையை நன்கு செய்ய முடியுமோ, அந்த வேலையைச் செய்வது என முடிவு செய்து, ‘அபெக்ஸ்’ என்கிற பெயரில், ஒரு நிறுவனத்தை துவங்கி, கூட்டாக செயல்படத் துவங்கினோம்.
இந்தக் கூட்டு முயற்சியை நாங்கள் துவங்கியவுடன், பிசினஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.
‘கிளஸ்டர்’ முறையில் செயல்படுவதால், எல்லா நிறுவனங்களுக்கும் ஒருவரே சென்று ஆர்டர் வாங்குவது, மொத்த கொள்முதல் மற்றும் அதிக சிக்கனமான விலையில் மூலப்பொருட்களை வாங்குவது மற்றும் மொத்தமாக பொருட்களை அனுப்புவதன் வாயிலாக போக்குவரத்துச் செலவுகளை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகள் கிடைத்தன.
இன்று உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தீப்பெட்டியை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
தரமான தீப்பெட்டிகளைத் தயாரித்து தருவதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின் ஆதரவை நாங்கள் என்றென்றும் பெறுவது எங்களின் முக்கிய நோக்கம்.
இப்போது, 250 கன்டெய்னர் அளவுக்கு தீப்பெட்டியை ஏற்றுமதி செய்யும் நாங்கள், 600 கன்டெய்னர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
தீப்பெட்டியைத் தயாரிப்பதன் வாயிலாக, பற்ற வைப்பதற்கு மட்டும் நாங்கள் பயன்பட்டால் போதாது; ஆக்கத்துக்கும் பயன்பட வேண்டும் என்கிற எங்கள் எண்ணம், எங்களைத் தோட்டக் கலைக்கு இட்டுச் சென்றது.
‘டிரெல்லிஸ் பிலிஸ்’ என்கிற பிராண்டில் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான மண், உரம் ஆகியவற்றை இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குத் தருகிறோம்.
கடந்த ஆறு மாதங்களில், 4,000 வாடிக்கையாளர்களுக்கு தந்திருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுக்க 10 லட்சம் வாடிக்கையாளருக்குத் தர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்