அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை நடைபெற்ற அன்று, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும், பெரும்பான்மைவாத அரசியலுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை பக்கத்தைப் பதிவிட்டு, `இந்தியா என்பது மதசார்பற்ற நாடு’ என்பதை வலியுறுத்தினர். இத்தகைய சூழலில், நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின், MyGovIndia எனும் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், பதிவிடப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படம், தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

அதாவது, MyGovIndia பதிவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தில், `மதச்சார்பற்ற (Secular), சோசலிஸ்ட் (Socialist)’ என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க அரசு இவ்வாறு செய்வது இது முதல்முறையுமல்ல.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடந்தபோது, நாடாளுமன்ற எம்.பி-க்களுக்கு இந்திய அரசியலமைப்பு பிரதி வழங்கப்பட்டது. அந்தப் பிரதியின் முன்னுரை பக்கத்திலும், மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளை அரசு நீக்கியிருந்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, பா.ஜ.க அரசு இதனை வேண்டுமென்றே செய்கிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், “1950-ல் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது முன்னுரை இவ்வாறுதான் இருந்தது. அதன்பிறகு 42-வது திருத்தும் கொண்டுவரப்பட்டு மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. எனவே, அசல் பிரதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தற்போது கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் இவ்வாறு செய்திருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை கூறுவது என்ன?
டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில், `இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (Republic)’ என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகம் இடம்பெற்றிருக்கும்.

அதன்பின்னர், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை (Emergency) பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், 1976-ல் இந்திய அரசியலமைப்பில் 42-வது திருத்தத்தின் ஒருபகுதியாக, அரசியலமைப்பின் முன்னுரையில் ஏற்கெனவே இருந்த வார்த்தைகளுடன், மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டது.

அன்றுமுதல் இதுவே நடைமுறையில் இருக்கிறது. மேலும், அரசியலமைப்பின்படி இந்தியாவுக்கென்று குறிப்பிட்ட மதமோ, மொழியோ கிடையாது. அனைத்து மதத்தினரும், அவரவர் மொழி, கலாசாரத்துடன் ஒற்றுமையாகச் சுதந்திரமாக வாழும் மதசார்பற்ற நாடக இந்தியா இருக்கும் என்றே அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படியிருக்க, பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் வணங்கும் ராமர் கோயிலின் திறப்பு விழாவை, அரசு விழா போல பிரதமர் முன்னிலையில் நடைபெற்றதும், அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் நீக்கப்படுவதும், பா.ஜ.க தனது பெரும்பான்மைவாத அரசியலை முன்வைத்து, சிறுபான்மை மதத்தினரை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY