ஆஸ்திரேலியாவை ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ்… இந்த வெற்றியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

AUS vs WI Gabba Test: ஆஸ்திரேலியாவுக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கு இந்திய தீவுகள் அங்கு விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக பறிகொடுத்த மேற்கு இந்திய தீவுகள், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பை வைத்தது எனலாம்.

பகலிரவு போட்டி

பிரிஸ்பேன் காபாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 311 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்வா டி சில்வா 79 ரன்களையும், கேவாம் ஹாட்ஜ் 71 ரன்களையும் குவித்தனர். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களில் 9 விக்கெட்டை இழந்திருந்தபோது, டிக்ளர் செய்தது. அதில், கவாஜா 75 ரன்களையும், அலெக்ஸ் கேரி 65 ரன்களையும் எடுத்தனர். மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், கேமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அடுத்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 193 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மேற்கு இந்திய தீவுகள் மெக்கன்ஸி 41 ரன்களை அதிகபட்சமாக அடித்தார். ஹேசில்வுட், நாதன் லயான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வேகப்புயல் ஷாமார் ஜோசப் 

இதன்மூலம், 216 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஸ்மித் மற்றும் கிரீன் ஆகியோர் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால், ஷாமார் ஜோசப் சிறப்பான பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தினார். கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் ஹேரி, ஸ்டார்க், பாட் கமின்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓப்பனராக வந்த ஸ்மித் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார்.

திரில் வெற்றி

பாட் கம்மின்ஸ் 8 விக்கெட்டாக ஆட்டமிழந்தபோது, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. நாதன் லயான் களமிறங்கி ஸ்மித்திற்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். அந்த ஜோடி 16 ரன்களை சேர்த்தபோது, லயான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஹசில்வுட் பெரிய ஷாட்டுக்கு போகாமல் ஸ்மித்திற்கு ஸ்ட்ரைக்கை ரோடேட் செய்தார். ஸ்மித் சிக்ஸர், பவுண்டரி என போன நிலையில், இலக்கு ஒற்றை இலக்கத்திற்கு வந்தது. ஷாமார் ஜோசப் வீசிய 51ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ஹேசில்வுட் போல்டாக, மேற்கு இந்திய தீவுகள் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

207 ரன்களை மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியாவுக்கு ஸ்மித் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சில் ஷாமார் ஜோசப் 7 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், கஸ்டின் கிரீவுஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும், இந்த போட்டியை வென்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷாமார் ஜோசப் வென்றார். 

இந்த வெற்றியின் ஸ்பெஷல் என்ன?

ஆஸ்திரேலியா தங்களின் கோட்டையாக வர்ணிக்கும் காபா மைதானத்தில் 2021ஆம் ஆண்டில் இந்தியா அந்த அணியை வீழ்த்திய பின்னர், தற்போது மீண்டும் ஒருமுறை மேற்கு இந்திய தீவுகளால் காபா கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது எனலாம். மேலும் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே மேற்கு இந்திய தீவுகள் வீழ்த்தி உள்ளது. கடைசியாக 1997ஆம் ஆண்டு WACA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

West Indies YOU BEAUTY!!!

Gabba has been breached once again!#AUSvWI pic.twitter.com/NrTdebIAOe

— Himanshu Pareek (@Sports_Himanshu) January 28, 2024

மேலும், ஆஸ்திரேலியா முதல்முறையாக பின்க்பால் டெஸ்ட் போட்டியில், அதாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. இதுவரை டெஸ்ட் வரலாற்றில் 22 பகலிரவு போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இதையும் சேர்த்து மொத்தம் 12 போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடியிருக்கிறது. இதுவரை தோல்வியே தழுவாமல் விளையாடி வந்த ஆஸ்திரேலியா, இம்முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு கடந்தாண்டு சிறப்பான ஆண்டாக இருந்த சூழலில், இந்தாண்டின் முதல் மாதம் முடிய உள்ள தருணத்தில் ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. 

Less than a year ago, Shamar Joseph made his FC debut.

3 months ago – he was a net bowler at the CPL.

Today – he has taken 7 wickets to win a test match for the West Indies in Australia!!

@windiescricket #AUSvWI pic.twitter.com/wR97TiRV30

— Nikhil Uttamchandani (@NikUttam) January 28, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.