IPL 2024, Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் அட்டவணை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், தேதிகளும் போட்டி நடைபெறும் மைதானங்களும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி, மே மாதம் இறுதி வாரம் என வழக்கம்போல் 45 நாள்களுக்கு மேல் நடைபெற வாய்ப்புள்ளது.
ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு
அந்த வகையில், ஐபிஎல் குறித்த பேச்சுக்கள் இப்போதே தொடங்கியும்விட்டது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து (India vs England) போட்டிக்கு பின் ஐபிஎல் தொடர்தான் நடைபெற உள்ளது என்பதால் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக, தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாமல், சாதரண வீரராக மும்பை இந்தியன்ஸில் விளையாட உள்ளார்.
இவை அனைத்தும் ஐபிஎல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துள்ளது எனலாம். இந்நிலையில், தோனி (MS Dhoni) குறித்து பல சுவாரஸ்யமான தனிப்பட்ட சம்பவங்களை அந்த அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் நினைவுக்கூர்ந்துள்ளார்.
இன்னும் 2-3 சீசன்
அதில்,”எம்எஸ் தோனி கிரிக்கெட்டுக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் இன்னும் 2-3 ஐபிஎல் சீசன்களுக்கு (IPL 2024) விளையாடலாம். அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் ஏற்படக்கூடிய காயம்தான் அவருக்கும் ஏற்பட்டது. அந்த காயம் 24 வயதுடையவருக்கும் ஏற்படும்தான்.
காயத்தில் இருந்து அவர் நன்றாக குணமடைந்துள்ளார். என்னைப் பொறுத்தவரை, அவர் இன்னும் 2-3 ஆண்டுகள் விளையாட வேண்டும். ஆனால் அது அவருடைய முடிவுதான். அவர் தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாடப் போவதாக எல்லோரிடமும் கூறியிருக்கிறார். எனவே, அவர் தான் முடிவு செய்வார் என்று நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை அவர் இல்லாமல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும், எப்போதும் தோனியுடன்தான் சிஎஸ்கேவை பார்த்திருப்பார்கள்.
நிறைய பப்ஜி விளையாடுவோம்
தோனியுடன் நன்றாக பழக எனக்கு 2-3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. நான் அவரை ஒரு மூத்த சகோதரனாகப் பார்க்கிறேன். அவர் என்னை ஒரு தம்பியாகவே நடத்துகிறார் என்று நினைக்கிறேன். எங்களுக்குள் பல வேடிக்கையான தருணங்கள் உள்ளன. லாக்டவுன் போது, நாங்கள் ஒன்றாக நிறைய பப்ஜி விளையாடினோம். நாங்கள் ஒன்றாக நிறைய போட்டிகளை விளையாடினோம்.
நாங்கள் களத்திற்கு வெளியே நிறைய நேரம் ஒன்றாகச் செலவிட்டோம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டது என்னுடைய அதிர்ஷ்டம்தான். அவரால் தான் எனக்கு இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது என்று கூறுவேன். அதற்கு முன், ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களிலும் விளையாட அவர் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். 2018ஆம் ஆண்டில், நான் 14 ஆட்டங்களிலும் விளையாடினேன்” என்றார்.
தோனி – தீபக் சஹார் சேட்டைகள்
ஐபிஎல் சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் தோனி மற்றும் தீபக் சஹார் ஆகியோரின் வீடியோ அடிக்கடி வைரலாகும். குறிப்பாக, கடந்தாண்டு குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பிறகு, கொண்டாட்டத்தின் போது தோனியிடம் கையெழுத்து வாங்க தீபக் சஹார் வருவார். அப்போது ஒருவரிடம் தோனி பேசிக்கொண்டிருப்பார்.
பேசும்போதே தீபக் சஹாரை (Deepak Chahar) நோக்கி கையெழுத்து முடியாது, போ என்பது போன்று சைகை செய்து கிண்டல் செய்வார். தீபக் சஹாரும் சிறு குழந்தை போல தோனியிடம் பேசுவார். இந்த வீடியோ அந்த சமயத்தில் அதிகம் வைரலானது. தீபக் சஹார் இறுதிப்போட்டியில் ஒரு கேட்சை கோட்டைவிட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.