ஜம்மு: பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் காங்., கூட்டணியில் இருந்து விலகி பா.ஜவுடன் கைகோர்த்த அதே நாளில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
பா.ஜ.,வுக்கு எதிராக பல கட்சிகளை கூட்டணியாக இணைத்து ஒரு பெரும் பலத்தை காட்டலாம் என நினைத்த காங்கிரஸ் எண்ணத்தில் சறுக்கல் ஏற்படுவது தொடர்கிறது. ‘இண்டியா ‘ என்ற கூட்டணியில் தொகுதி பங்கீட்டால் மனக்கசப்பு ஏற்பட்டதால் மம்தா, கெஜ்ரிவால், அவரவர் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் நாளுக்கு நாள் இண்டியா கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. பிரதமர் வேட்பாளராக பேசப்பட்ட நிதீஷ்குமார் கூட ராஷ்ட்டிரிய ஜனதாதள கூட்டணியை முறித்து பா.ஜ.வுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
நேற்று நடந்த அணிமாற்றத்தின் அதே நாளிலேயே இண்டியா கூட்டணியில் உள்ள தேசியமாநாட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் கத்துவா மாவட்ட தலைவர் சஞ்சீவ் கஜூரியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார். இவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அடக்கம் . இதன் இணைப்பு விழா காஷ்மீர் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா வரவேற்றார்.
“பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலன் பேணும் அரசாக உள்ளது. அவரது திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று பலன் அளிக்கிறது. இது என்னை கவர்ந்தது” என கட்சியில் சேர்ந்த கஜூரியா கூறியுள்ளார்.
கட்சி நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைந்ததால் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் பரூக்அப்துல்லா கவலை அடைந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement