பட்ஜெட் 2024: இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் 5 பெரிய சவால்கள்… பட்டியலிடும் அனந்த நாகேஸ்வரன்!

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகரான ஆனந்த நாகேஸ்வரன் இந்திய பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக, மத்திய பட்ஜெட்டுக்குமுன் தலைமை பொருளாதார ஆலோசகர் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, இதற்கு முன்பாக, பொருளாதார அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்

இந்தப் பொருளாதார அறிக்கையில், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 7 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளருவதற்கு முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்யும் என சில கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கணிப்பு சரியாக இருந்தால், கொரோனா பாதிப்புக்குப்பின் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு 7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும்.

இந்தியப் பொருளாதாரம் தற்போது ஐந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாக ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவை..

1. உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைந்துகொண்டே வருவதால், உள்நாட்டு சூழல் மட்டுமல்லாமல், சர்வதேச சூழலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரிவுகள், உலகமயமாக்கலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போன்றவற்றால் உலக வர்த்தகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, சர்வதேச வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்

2. இடைக்காலம் முதல் நீண்டகாலம் வரை, வளர்ச்சி மட்டுமே மீள்தன்மையைக் கட்டமைக்க உதவும். வளர்ச்சியால் வளங்கள் உருவாக்கப்பட்டு, காலநிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனும் கிடைக்கும்.

தற்போது உலகம் முழுவதுமே காலநிலை மாற்ற நடவடிக்கைகள், சில நாடுகளின் வருமான நிலையை கீழ்நிலையிலேயே வைத்திருக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சிக்கும், காலநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு சமநிலை வேண்டும்.

3. இந்தியா டிஜிட்டல் புரட்சியில் சவாரி செய்து வருகிறது. ஏ.ஐ தொழில்நுட்பம் சில சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தாக உருவாகி இருப்பதால், உலகம் முழுவதுமே அரசுகளுக்கு ஏ.ஐ துறை சவாலாக எழுந்துள்ளது. உலகின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகிதம் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்துக்கு உட்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வளரும் நாடுகள் உள்கட்டமைப்பிலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் திறன் பயிற்சியிலும் முதலீடு செய்ய வேண்டும். டிஜிட்டல் சேவைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளுக்கு, விலைப் போட்டியை ஏ.ஐ தொழில்நுட்பம் நீக்கக்கூடும்.

4. தொழில் துறைக்கு தேவையான திறன் வாய்ந்த ஊழியர்கள், பள்ளிகளில் வயதுக்கு உகந்த கல்வித் திறன், ஆரோக்கியமான மக்கள் ஆகியவை இந்தியாவுக்கு கொள்கை அடிப்படையில் முக்கியமானவை. இவை இந்தியாவுக்கான சவால்களாகவும் இருக்கின்றன. ஆரோக்கியமான, படித்த, திறன் வாய்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக உற்பத்தித் திறன் வாய்ந்த ஊழியர் சக்தியாக மாறுவார்கள்.

பொருளாதாரம்

5. தற்போது செங்கடலில் நீடித்து வரும் பதற்றமான சூழல் உள்பட, உலகளவில் நிகழும் அரசியல் பதற்றங்களால் இப்போதைய சூழலில் ஏற்றுமதி செய்வது எளிதாக இல்லை. எனவே, போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, தரமான பொருட்களில் முதலீடு செய்து, இந்தியாவுக்கு வாய்பு இருக்கும் சந்தைகளில் இந்தியா தனது சந்தை பங்கை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தற்போது செங்கடலில் வரும் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பாதிக்கபட்டுள்ளன. மாற்று வழிகளில் கப்பல்கள் பயணிப்பதால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கின்றன. செங்கடலில் நீடிக்கும் பதற்றத்தால் இந்தியாவின் ஏற்றுமதி 30 பில்லியன் டாலர் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து முக்கியமான விஷயங்களும் இன்று வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.