திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்கு விசாரணைக்காக வந்தவர்களிடம் அங்கு ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை நடத்தும்போது பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சி.பி.சி.ஐ.டி நான்கு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஏ.எஸ்.பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்து காவல்துறையினர் தன்னை கடுமையாக தாக்கினர். அப்போது நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. தான் மட்டுமன்றி விசாரணை கைதிகள் சிலரது பற்களை பிடுங்கி ஏ.எஸ்.பி பல்வீர் சிங் சித்ரவதை செய்தார். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 -ஆம் தேதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் ஆகியோரின் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, ‘தமிழ்நாடு அரசின் சிறப்பு விசாரணை அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ்-சின் விசாரணை அறிக்கை, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் சிசிடிவி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமுதா ஐ.ஏ.எஸ்-சின் விசாரணை அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இளங்கோவன், ‘கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்-சின் அறிக்கையை மனுதாரரிடம் வழங்க வேண்டும், இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனு மீதாக இறுதி உத்தரவு விரைவில் வழங்கப்படும்” என்று உத்தரவிட்டவர் வழக்கை வருகின்ற 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY